புழு திரைப்படம் முகநூல்
சினிமா

2022-ல் வெளியான ‘புழு’ திரைப்படத்துக்காக தற்போது சைபர் தாக்குதலை எதிர்க்கொள்ளும் மம்முட்டி!

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த 2022 ஆம் ஆண்டு மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் ரதீனாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புழு’. இதில் பிராமண சமூகத்தை சேர்ந்தவராக நடித்துள்ளார் மம்முட்டி. இப்படத்தில், மம்முட்டியின் சகோதரி பட்டியலின இளைஞரை காதலித்த நிலையில், அதனை ஏற்று கொள்ள இயலாத மம்முட்டி, இறுதியில் தங்கை, தங்கையின் கணவர் என இருவரின் உயிரையும் பறிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்படம் வெளியாகி கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இது எதிர்ப்புகளை பெற்று வருகிறது. வெளியானபோது மக்களின் ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்ற இப்படம், தற்போது மற்றொரு தரப்பில் கடும் எதிர்ப்பினை சம்பாதித்து வருகிறது.

குறிப்பாக “நடிகர் மம்முட்டியை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர். அவரது பெயரே, முகமது குட்டி. அப்படியான அவர் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி விட்டார்” என அவர் மீது சிலர் சைபர் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். ஒருசில வலதுசாரி அமைப்புகளின் வலைதளப்பக்கங்களில் இருந்தும் மம்முட்டிக்கு எதிர்ப்பு கிளம்பிவருகிறது. அதிலும் சில அமைப்புகள், மேற்கொண்டு மம்முட்டி நடிக்கும் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுள்ளன.

மலையாள திரையுலகில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கிவரும் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி மீது நிகழும் இந்த சைபர் தாக்குதலுக்கு, பலத்த கண்டனங்களும் எழுந்துள்ளன. கேரள அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் ஆதரவை மம்முட்டிக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், கேரள வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் “மம்முட்டியை முகமது குட்டி என்றும், இயக்குநர் கமலை கமாலுதீன் என்றும், விஜய்யை ஜோசப் விஜய் என்றும் அழைக்கும் வெறுப்பு அரசியலுக்கு கேரளாவில் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "தெளிவான அரசியல் பார்வையும், செயல் உணர்வும் கொண்ட மம்முட்டி மீது எவ்வளவுதான் போலி முத்திரை குத்த முயன்றாலும், கேரளாவின் மதச்சார்பற்ற சமூகம் சங் பரிவார் கதைகளுக்கு அடிபணியாது. அரைநூற்றாண்டு காலமாக தனது நடிப்பு திறமையால் மலையாள சினிமாவிற்கு அடையாளம் பெற்று கொடுத்தவர்களில் மம்முட்டி முதன்மையானவர்" என்று தெரிவித்துள்ளார்.

சிபிஎம் மூத்த தலைவர் வி சிவன்குட்டி:

நடிகர் மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “இந்த வேலையெல்லாம் கேரளாவில் எடுபடாது. மம்மூட்டி கேரளாவின் பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

இப்படியாக நடிகர் மம்முட்டி மீதான விமர்சனங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.