சினிமா

’ஒரே ஒரு காட்சியை 7 நாள் ஷூட் பண்ணிய சித்திக்’: மதன் பாப்பின் ’நேசமணி’ அனுபவம்!

’ஒரே ஒரு காட்சியை 7 நாள் ஷூட் பண்ணிய சித்திக்’: மதன் பாப்பின் ’நேசமணி’ அனுபவம்!

webteam

உலக அளவில் ட்ரெண்டாகி இருக்கும் ’நேசமணி’ அனுபவம் பற்றி, அந்த படத்தில் நடித்த மதன் பாப்பிடம் கேட்டால், சிரித்துக்கொண்டே பேசுகிறார்.

’வடிவேலு டயலாக் இல்லாமல் நாங்கள் இல்லை’ என்ற நிலையில் இருக்கிறது சமூக வலைத்தளங்கள். எந்த மீம்ஸ்க்கும் பொருந்தி போகிறது அவரது காமெடி டயலாக். இந்நிலையில் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில், உலக அளவில் ட்ரெண்ட் அடிக்கிறது அவரது ‘ப்ரெண்ட்ஸ்’  நேசமணி கேரக்டர்! 

இன்ஜினீயரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது ’நேசமணி தலையில் விழுந்தது’ என ஒரு நையாண்டி தமிழ் நெட்டிசன் பதிலளிக்க, சமூக வலைதளங்களில் நேற்றில் இருந்து அநியாயத்துக்குச் சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார் நேசமணி!

இந்த நேசமணி, 2001 ஆம் ஆண்டு வெளியான ’ஃபிரெண்ட்ஸ்’ படத்தில், வடிவேலுவின் கேரக்டர் பெயர். சித்திக் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, மதன்பாப், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சியும் செம ஹிட். ’’ஆணியே புடுங்க வேண்டாம்’’ , ‘’நீ புடுங்கிற எல்லா ஆணியுமே தேவையில்லாத ஆணிதாம்’’, ‘’டேய் அப்ரண்டீஸூகளா’’ உட்பட வடிவேலு இதில் பேசும் காமெடி டயலாக்குகளும் பிரபலம். இந்நிலையில்தான் 18 வருடத்துக்குப் பிறகு டிரெண்டாகி இருக்கிறார் ’நேசமணி’ வடிவேலு!

இந்தப் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காமெடி அனுபவங்கள் பற்றி கேட்டபோது, ‘’ அது மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் மதன் பாப்.

‘’காமெடி காட்சிகளை படமாக்குறதுல மூணு பேர் டாப். ஒண்ணு, சார்லி சாப்ளின், இன்னொருத்தர் ஜாக்கி சான், மூணாவது சித்திக். ஒவ்வொரு காட்சியையும் ரொம்ப ரசிச்சு எடுப்பார். இந்த படத்துல நான் எண்ணெய்ல வழுக்கி விழற காட்சியை மட்டும் ஆறு நாள் எடுத்தார்னா பாருங்க ளேன். அதனாலதான் அந்த காமெடி காட்சிகள் இன்னும் உயிர்ப்போட இருக்கு.  அந்த சுத்தியல் காட்சிக்குப் பிறகு, எங்க மேல அழுக்குத்  தண் ணிய ஊத்திட்டு ரமேஷ் கண்ணா, ‘’நேசமணி சித்தப்பா தலையில சுத்தி விழுந்துட்டு’’ன்னு சொல்லிட்டு போவார்.

நாங்க கோப எக்ஸ்பிரன்ஸ் காட்டணும். ஆனா, சிரிப்பா வரும். இந்தப் படத்துல ஒவ்வொரு காட்சியும் எடுக்கும்போது நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம். சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த நினைச்சாலும் வடிவேலுவோட எக்ஸ்பிரன்ஸ் எங்க எல்லாரையுமே சிரிக்க வச்சிரும். அந்த அனுபவத்தை எப்ப நினைச்சாலும் என்னால மறக்க முடியாது’’ என்கிறார், மதன் பாப்!