Karthi-Vijay PT Desk
சினிமா

“இங்கு எவ்வளவு செய்தாலும் பத்தல; விஜய் அண்ணாவும் செய்வது ரொம்ப மகிழ்ச்சி...” - கார்த்தி நெகிழ்ச்சி

நடிகர் விஜய் பயிலரங்கம் துவங்கியது ரொம்ப மகிழ்ச்சியானது என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

சங்கீதா

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44 ஆவது ஆண்டு விழா மற்றும் அகரம் அறக்கட்டளை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மேடையில் பேசிய நடிகர் கார்த்தி, “கல்வி முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டமாக தற்போது உள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு இல்லை. அப்போது கணக்கு போட கூட மணல் மீது தான் எழுத வேண்டும். மேலும், நீண்ட தூரத்தில் உள்ள பள்ளியில் ஓர் ஆசிரியர் தான் இருப்பார். அப்படியே பத்தாம் வகுப்பு படித்தால் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். ஒரு பையன் படித்தால் அந்த குடும்பம் மட்டுமல்ல, அந்த தலைமுறையே பயன்பெறும். அப்படிப்பட்ட குடும்பம் தான் எங்களது குடும்பம். 1980-களில் எம்.ஜி.ஆர். மூலம் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டது.

மலை மீது இருந்து கீழே இறங்கி வந்து படிக்கும் குழந்தைகள் உள்ளன. இது எவ்வளவு பெரிய சாதனையாகும். அவர்கள் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்கள் குழந்தைகளும் படிக்கின்றனர். இப்போது கவனத்தை சிதறவிட அதிகம் உள்ளது. அதற்கு முக்கியதுவம் கொடுக்க கூடாது. கல்வியின் முக்கியத்துவத்தை அடிக்கடி சொல்ல வேண்டும்” என பேசினார்.

பின்பு, அங்கிருந்து கிளம்பும்போது சரியான மாணவர்களுக்கு உதவி புரிவது எந்தளவு மகிழ்ச்சி கொடுக்கிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நிறைய செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. இது எதுவும் பத்தவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில், அகரம் பவுண்டேஷனுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகிறது. அதில் 500, 600 விண்ணப்பங்களை மட்டுமே நிவர்த்தி செய்யப்பட முடிகிறது. இன்னும் 4,000 பேர், 5,000 பேர் தகுதியானவர்கள். அவர்களுக்கு கொடுக்கமுடியாமல் போகிறது என்ற வருத்தம்தான் அதிகம் உள்ளது. எளிய பின்புலத்தில் இருந்து வந்து சாதனை படைக்கும் மாணவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. மிகப்பெரிய சாதனையாக பார்க்க முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிலரங்கம் துவங்கியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “நடிகர் விஜய் பயிலரங்கம் தொடங்கி இருப்பது மிகவும் சந்தோஷம். இதுவும் பத்தாது; ஏனென்றால் அவ்வளவு தேவை இங்கு உள்ளது. விஜய் அண்ணா செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.