கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு புதிய தலைமுறை
சினிமா

"போராட்டங்கள் தொடரும், சட்டம் வெல்லும்" - செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன்!

அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு, "போராட்டங்கள் தொடரும், சட்டம் வெல்லும்" என பதிலளித்து பாதியில் எழுந்தார் நடிகர் கமல்ஹாசன்.

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், நடிகை தீபிகா படுகோன் என பிரபல நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD. இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கல்கி 2898 AD படத்தில் கமல்ஹாசன்

இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் நடிகர் கமல்ஹாசன் திரைப்படத்தினை பார்த்து பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “கல்கி படம் பார்த்துட்டு வரேன். நான் ஒரு சில நிமிஷங்கள்தான் வரேன். எனக்கு படத்தில் வேலை தொடங்குவது, பார்ட் 2-வில்தான். உலக சினிமாவை நோக்கி இந்திய சினிமா நகர்ந்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்று கல்கி.

நான் மனிதர்களோடு வாழ்பவன். இந்தியாவுடன் கதைபோட்டி போடுவதற்கு கிரேக்கம், சீனாவால்தான் முடியும். வட நாட்டில் இருந்து ஒரு படம் வரும் போது அதில் நிச்சயம் ஒரு டூயட் இருக்கும். ஆனால் இப்படம் அப்படி இல்லை. இப்படத்தை குழந்தைகள் ரசிப்பார்கள்.

இனியும் இது போன்ற கூட்டு முயற்சி தொடரும். ஆடியன்ஸ்க்கு எதுவும் தெரியாது என சொல்வது இயலாவதர்கள் கூற்று. பாட்டு இல்லாத ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்த கூட்டம் கூட்டமா பார்த்துட்டு வருவார்கள் நம் மக்கள். வரலாற்றில் நாம் யுகயுகமாக கைப்பாவையாக இருந்திருக்கிறோம். அப்போதும் அரசியல் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. அது நல்லவர்களின் கையில் இருக்கவேண்டும் என்று மட்டுமே நாம் எதிர்பார்க்க வேண்டும்” என்றார்.

கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு, "போராட்டங்கள் தொடரும், சட்டம் வெல்லும்" என பதிலளித்து பாதியில் எழுந்தார் நடிகர் கமல்ஹாசன்.

தொடர்ந்து சீமான் அதிமுக போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளாரே என்ற கேள்விக்கு எழுந்து நடந்துகொண்டே "அவரிடம் சென்று கேளுங்கள்" என கூறிவிட்டு, செய்தியாளர் சந்திப்பை கேன்சல் செய்து கமல்ஹாசன் புறபட்டுச் சென்றார்

கமல்ஹாசனின் முழு பேட்டியை கீழ் இணைக்கப்படும் காணொளியில் அறியலாம்...