சினிமா

"எங்களை மிஞ்சிய படைப்புகளை கொடுங்கள்..." - 'பிரேமம்' இயக்குநர் கேள்விக்கு கமல் பதில்

"எங்களை மிஞ்சிய படைப்புகளை கொடுங்கள்..." - 'பிரேமம்' இயக்குநர் கேள்விக்கு கமல் பதில்

நிவேதா ஜெகராஜா

'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனின் வேண்டுகோளுக்கு இணங்க, 'மைக்கேல் மதன காமராஜன்' படம் குறித்த அனுபவங்களை நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரங்களில் நடித்த 'தசாவதாரம்' வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் சமீபத்தில் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், 'நேரம்', 'பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் "படம் இயக்குவதில் 'தசாவதாரம்' பிஹெச்டி போன்றது என்றால், 'மைக்கேல் மதன காமராஜன்' டிகிரி கோர்ஸ் போன்றது. 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டிருந்தார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்க கமல்ஹாசனும் கிரேசி மோகனும் திரைக்கதை அமைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும், எப்போதும் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் இந்தப் படம் குறித்த அல்போன்ஸ் புத்திரன் கேள்விக்கு, பதிலளித்திருந்த கமல்ஹாசன், "நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். சீக்கிரம் சொல்கிறேன். உங்களுக்கு எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் சொன்ன மாதிரி அது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இதுகுறித்துப் பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக்கொடுக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

தான் உறுதியளித்தது போலவே இப்போது, கமல் 'மைக்கேல் மதன காமராஜன்' படம் குறித்து விரிவாக பேசியுள்ளார். ``அல்ஃபோன்ஸ் மற்றும் இன்னும் பல புத்திரன்களின் வேண்டுகோளுக்கு இங்கே பதில்" என்று குறிப்பிட்டு ஆரம்பித்து இருக்கும் அந்தப் பதிவில், ``இந்தப் படத்தை `மாஸ்டர் கிளாஸ்' படம் என சொன்னதின் பொருள் நான்தான் அதன் மாஸ்டர் என்பதல்ல. திரைப்படங்களின் நுணுக்கம் குறித்து நான் கற்பிக்காததற்குக் காரணம், கற்பிப்பதற்கு ஒரு பெரிய தியாகம் தேவை. இது ஒரு தாய்க்கு சமமான பணி. ஆனால், நான் ஒரு மாணவன். அதுவும் ஆர்வம் குன்றாத மாணவன். இதன் அர்த்தம், நான் ஓர் ஆசிரியரை விட சுயநலவாதி என்பதே.

மொத்த வகுப்போடு சேர்ந்து நானும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால், ஒரு வகுப்பில் உரையாற்றுவதில் எனக்கு எந்த உறுதியான நிலைப்பாடும் இல்லை. உரையாற்றுவதில் எனக்கு எந்த பதற்றமும் இல்லை. ஆனால் உரையாற்றுவதை விட கற்பதில் ஒரு ஆசிரியரை விட எனக்கு ஒரு பெரிய பசி இருக்கிறது. அதனால்தான் எனக்கு எப்போதும் அதிக ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இயக்குநர்கள் அனந்து, சிங்கீதம் மற்றும் கே.பாலசந்தர் ஆகியோரிடமிருந்து நான் இவ்வளவு கற்றுக்கொண்டதற்கு எனக்கு இருந்த இந்தப் பசியே காரணம். இவர்கள் அனைவரும் கற்பித்தல் கலையில் உச்சம் பெற்றவர்கள்.

எனக்கு இருந்த குருக்கள் அனைவரும் எதாவது ஒரு பாடத்தை அல்லது கல்வியை எனக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் அதே பாணியை நானும் பின்பற்ற முயற்சிக்கிறேன். அதன்படி, எனது கற்றல் செயல்பாட்டின்போது எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முயற்சிக்கிறேன். ஆனால், என்னையும் என் குருக்களையும் விட சிறப்பாக இதுபோன்ற படைப்புகளை நீங்கள் எடுப்பீர்கள் என்று உறுதி அளித்தால் மட்டுமே அது சாத்தியப்படும். இப்போதுள்ள புதிய தலைமுறை இயக்குநர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்ததைக் கண்டு, வரும் காலங்களில் அதனை மிஞ்சும் வகையிலான தங்கள் சொந்த கிளாசிக்ஸை உருவாக்க வேண்டும்.

'மைக்கேல் மதன காமராஜன்' பற்றி... நகைச்சுவையை எப்போதும் நீங்கள் வணிகமாக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள், கண்ணீர் சிந்த தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை உங்களின் வியர்வை அதற்காக ரத்தமாக கூட மாறலாம். அப்படி செய்தால் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் உங்கள் நகைச்சுவையால் சிரிப்பார்கள். ஒரு கோமாளியைக் கேளுங்கள். சிரிக்க வைக்க படும் வேதனையை அவர் உங்களுக்குச் சொல்வார். எதுவுமே இங்கு எளிதானது கிடையாது.

வெறுமனே ஒரு பந்தை சமநிலைப்படுத்தினால் உங்களுக்கு போதுமான கைதட்டல் கிடைக்காது. ஆனால், அதுவே சில தந்திரங்களைப் பயன்படுத்தி பாருங்கள்... உங்களுக்கு கைதட்டல்கள் கிடைக்கும். இதுபோன்ற அனைத்தையும் அறிந்துகொண்டு இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்" என்று அறிவுரைகளை வழங்கியதுடன், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஒவ்வொரு பதிவாக `மைக்கேல் மதன காமராஜன்' அனுபவங்களை, பாடங்களை பகிர்ந்து வருகிறார் கமல்ஹாசன்.