நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் யூ-ட்யூப் சேனல் நேற்று காலை ஹேக் செய்யப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகராக மட்டுமில்லாமல், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முகத்திறமைகளையும் வெளிப்படுத்தி வருபவர் தனுஷ். அந்தவகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar films) மூலம் முதன்முதலாக தயாரித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், இதையடுத்து வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘காக்கி சட்டை’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘நானும் ரௌடிதான்’, ‘விஐபி 2’, ‘வடசென்னை’, ‘மாரி 2’, ‘தங்கமகன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரித்தது மட்டுமின்றி, அதன்பேரில் யூ- ட்யூப் சேனல் ஒன்றையும் நடிகர் தனுஷ் நடத்தி வந்தார். குறிப்பாக இந்த யூ- ட்யூப் சேனலில், தனுஷ் நடித்து தயாரித்திருந்த ‘மாரி 2’ படத்தின் பிரபல பாடலான ரௌடி பேபி பாடல் வெளியாகி பல்வேறு புதிய சாதனைகளை படைத்திருந்தது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானாது.
இந்நிலையில், ரௌடி பேபி பாடல் உள்பட வுண்டர்பார் பிலிம்ஸ் யூ- ட்யூப் சேனல், மர்மநபர்களால் நேற்று ஹேக் செய்யப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த சேனலில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மீண்டும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் யூ-ட்யூப் சேனல் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக, வுண்டர்பார் பிலிம்ஸின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் தனுஷின் யூ-ட்யூப் சேனல் செயல்பட துவங்கியுள்ளது.