நடிகர் சிரஞ்சீவி முகநூல்
சினிமா

கின்னஸ் சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி... நெகிழ்ந்து பாராட்டிய தம்பி பவன் கல்யாண்!

பல சாதனைகளுக்கும் விருதுகளுக்கும் மத்தியில் உலக கின்னல் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. இதற்கு அவரது தம்பியும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன சாதனை அது? பார்க்கலாம்...

ஜெனிட்டா ரோஸ்லின்

‘பிராணம் கரீது’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி... தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்துள்ளார்.

சிறந்த நடனத்திற்கு பெயர்போன இவர் தன்னுடைய இந்திரா, தாகூர், சுயம் க்ருஷி, சைரா நரசிம்ம ரெட்டி, ஸ்டாலின் மற்றும் கேங் லீடர், ஷங்கர் தாதா போன்ற பல படங்கள் மூலம் தெலுங்கு திரையுலகுக்கு மிகப்பெரிய வசூலை கொடுத்துள்ளார். மேலும், நந்தி விருதுகள், ரகுபதி வெங்கையா விருது, ஒன்பது பில்ம்பேர் விருதுகள், பத்ம பூஷன் என பல விருதுகளையும் வென்றுள்ளார் சிரஞ்சீவி.

இத்தனை சாதனைகளுக்கு மத்தியில் மீண்டும் ஒரு சாதனையை படைத்து தற்போது தெலுங்கு திரையுலகையே ஒரு கலக்கி கலக்கி வருகின்றார் நடிகர் சிரஞ்சீவி..

அப்படி என்ன சாதனை அது?

கடந்த 45 ஆண்டுகளில் தனது 156 படங்களில் மொத்தம் 537 பாடல்களில் 24,000த்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை செய்து, கின்னஸ் உலக சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் சிரஞ்சீவி. இந்த சாதனை பட்டியலில் சிரஞ்சீவி இடம்பிடித்தது, செப்டம்பர் 22, 2024 (நேற்று முன்தினம்). இதே நாளில்தான் அதாவது செப்டம்பர் 22-ல், 1978 ஆம் ஆண்டு சிரஞ்சீவி திரையுலகில் அறிமுகமானார் என்பது கூடுதல் சிறப்பு.

எனவே இது குறித்த நிகழ்ச்சி கடந்த 22 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் அமீர் கான், கின்னஸ் சாதனை படைத்ததற்கான விருதினையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சிரஞ்சீவிக்கு வழங்கி சிறப்பு செய்தார்.

அந்தச் சான்றிதழில், ”The most prolific film star in Indian Film Industry – actor/dancer is Konidela Chiranjeevi aka Mega Star achieved on 20 September 2024"  என்று எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் சிரஞ்சீவி தெரிவிக்கும்போது, “என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நடிப்பதைவிட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால்கூட எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமீர்கான்.. “சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை எனது மூத்த சகோதரராகவே பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் என பலர் சிரஞ்சீவிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், சிரஞ்சீவியின் தம்பியும் ஆந்திர துணை முதல்வருமான ‘டோலிவுட்டின் பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், “மிகவும் இக்கட்டான காலங்களுக்கு மத்தியில், இது (தன் அண்ணனின் கின்னஸ் சாதனை) ஒரு இனிமையான மற்றும் மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. நானும் அவரை கின்னஸ் சாதனைக்காக (சிரஞ்சீவி) வாழ்த்தினேன். அவருக்கு வழங்கப்படும் விருது அடுத்து வரும் புதிய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என நம்புகிறேன். அவர் எனக்கு அண்ணன் மட்டுமில்ல.. என் அப்பாவைப் போன்றவர் அவர்” என்றுகூறி நெகிழ்ந்துள்ளார்.

பவன் கல்யாண்

திருப்பதி லட்டுக்களில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், திருப்பதி ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரப்போவதாக கூறி அதற்காக பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.