அஜித் குமார், விடாமுயற்சி pt web
சினிமா

வீண் முயற்சியானதா விடாமுயற்சி? எழுந்த கேள்விகளுக்கு விழுந்த பதில்... டபுள் ட்ரீட்டில் ரசிகர்கள்..

PT WEB

ஒன்றரை ஆண்டுகளாக வெளியாகாத அஜித் திரைப்படம்

நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் அதிக வசூலை குவித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படும் திரைப்படம் துணிவு. ஹெச். வினோத் கூட்டணியில் வெளியான அஜித்தின் முந்தைய திரைப்படமான வலிமை, அதீத எதிர்பார்ப்பால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆனால், சினிமாவில் சக போட்டியாளராக விளங்கும் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் வெளியான துணிவு திரைப்படம், அஜித்துக்கு நல்ல கம்பேக்காகவே அமைந்தது.

துணிவு

துணிவு திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளாகியும் அஜித்திற்கு அடுத்த திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே கைவிடப்பட்டது. இதனையடுத்து, அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.

வீண் முயற்சியானதா விடாமுயற்சி

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி என பெயரிடப்பட்டு அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அர்ஜூன், ஆரவ், த்ரிஷா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இப்படியான சூழலில்தான், வீண் முயற்சியாக போனதா விடாமுயற்சி என்ற பேச்சுகள் மெல்ல முனுமுனுக்கத் தொடங்கின.

அதற்கு காரணம், அஜித் குமார் தனது பார்வையை பைக் பயணத்தின் பக்கம் திருப்பி இருந்தார். சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்களில் பெரும்பாலானவை அவர் பைக்குடன் வலம் வருபவையாகவே இருக்கும். திரைப்படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித் குமார் கார் விபத்துக்குள்ளாகும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஒருவழியாக படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியானாலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாமல் இருந்தது.

அப்டேட் கொடுத்த அர்ஜூன்

இதற்கிடையே, விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. இதனால், விடாமுயற்சி என்னவானது என்ற பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கின.

தற்போது அந்த பேச்சுகளுக்கு நடிகர் அர்ஜூன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாகவும் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

குட் பேக் அக்லி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையிடப்படும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. விடாமுயற்சியும் சிக்கலின்றி வெளியானால் குறுகிய காலத்தில் அஜித்தின் 2 திரைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களின் காத்திருப்புக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும்.