சினிமா

“ஆன்லைன் மூலம் இரண்டு இயக்குநர்களுடன் ஆலோசனை” - பி.சி. ஸ்ரீராம்

jagadeesh

பொது முடக்கம் காலத்தில் சின்சியராக வீட்டில் அமர்ந்து இரண்டு புதிய படங்களுக்கான ஆன்லைன் மூலம் ஆலோசனைகளில் பிரபல ஒளிப்பதிவாளரான பி சி ஸ்ரீராம் மூழ்கியுள்ளார்.

பி சி ஸ்ரீராம் இந்திய சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர். மணி ரத்னத்தின் "மௌன ராகம்" தொடங்கி பல்வேறு முக்கியப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மொழிகளைக் கடந்து தனக்கே உரிய ஒளிப்பதிவு கலையைக் கொண்டுள்ளதால் இந்திய சினிமாவின் கொண்டாடப்படக் கூடிய ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் இருக்கிறார்.

இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே இந்தப் பொது முடக்கக் காலத்தில் தெலுங்கு திரையுலகின் இரண்டு முக்கிய இயக்குநர்களுடன் பி சி ஸ்ரீராம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் "பொது முடக்கக் காலத்தில் தனி மனித இடைவெளி காரணத்தினால் இயக்குநர்கள் விக்ரம் குமார் மற்றும் வெங்கி அட்லூரியுடன் ஆலோசனை நடைபெற்றது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பி சி ஸ்ரீராம் இப்போது தெலுங்கில் நடிகர் நிதின், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "ரங் தே" படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை இயக்குவது வெங்கி அட்லூரி. மேலும் "யாவரும் நலம்", "மனம்", சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமாரின் அடுத்தப்படத்திற்கும் பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். விக்ரம் குமாரின் முந்தையப் படங்களான "யாவரும் நலம்" மற்றும் "இஷக்" ஆகியவற்றுக்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.