திரையரங்குகளுக்கு இணை எதுவுமில்லை எனவும், இதுபோன்ற நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அபிஷேக் பச்சன் மீண்டும் தனது வெப் சீரிஸில் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஜூலை 10ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் அபிஷேக் பச்சனின் பிரீத் : இண்டூ தி ஷேடவ்ஸ் (Breathe : Into the Shadows) என்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இதுவரை 12 எபிசோட்கள் வெளியாகி, அனைத்தும் அதிகபட்ச பார்வைகள் பெற்றுள்ளன. இதனால் வெப் சீரிஸில் அபிஷேக் பச்சனின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அபிஷேக், “சினிமா தியேட்டர்களுக்கு மாற்று என்பது எப்போதும் வரமுடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான். சினிமாவிற்கு செல்வது அனைத்திலும் சிறப்பானது. ஆனால் தற்போது நாம் அசாதாரண காலத்தில் வாழ்கிறோம். தியேட்டருக்கு செல்லவோ அல்லது கொண்டாடவோ முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் நேரடியாக ஒடிடி தளத்தில் படங்களை வெளியிடுவது என்பது ரசிகர்களுக்கு தங்கள் படத்தை கொண்டு சேர்ப்பதில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.