ஜெயம் ரவி - ஆர்த்தி web
சினிமா

”திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன்..” தனிப்பட்ட உரையாடலுக்கு காத்திருப்பதாக ஆர்த்தி ரவி பதிவு

Rishan Vengai

சமீபகாலத்தில் தமிழ் சினிமா ரசிகர்ளால் சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்ட தம்பதிகள் விவாகரத்து என்ற முடிவை எடுக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. அந்தவகையில் தமிழ்திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் விவகாரத்து விவகாரம் அதிக பேசுபொருளாக இருந்துவருகிறது.

சமீபத்தில் நடிகர் ஜெயம்ரவி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழப்போவதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

jayam ravi

அதற்கு பதிலளித்திருந்த ஆர்த்தி, “இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே (ஜெயம் ரவியை குறிப்பிட்டு) எடுத்த முடிவே.. இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

jayam ravi

இருப்பினும் இவருக்குமிடையேயான விவகாரத்து சார்ந்த கருத்து மாற்றங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்தவகையில் மனைவி மீதுதான் தவறு என்றும், தனக்கு எந்த மரியாதையும் கிடைப்பதில்லை என ஜெயம்ரவி கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் தற்போது ஆர்த்தி ரவி அதை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட உரையாடலுக்காக காத்திருக்கிறேன்..

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஆர்த்தி ரவி, நான் மவுனமாக இருப்பதால் என்மீதுதான் தவறு இருக்கிறது என்று அர்த்தமில்லை, நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன் என்றும், தனிப்பட்ட உரையாடலுக்காக காத்திருக்கிறேன் என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.

jayam ravi

இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “விவாகரத்து விஷயத்தில் ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட உரையாடலுக்காக காத்திருக்கிறேன். தற்போது வரை தனிப்பட்ட உரையாடலுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சட்டப்படி எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். சமூக வலைதளத்தில் என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட விமர்சன தாக்குதல்களுக்கு கண்டனம், அமைதியாக இருப்பதால் என் மீது தவறு இருப்பதாக நினைக்க வேண்டாம்.

திருமணத்தின் புனிதத்தை நான் ஆழமாக மதிக்கிறேன், தனிநபர் புகழை கெடுக்கும் வகையிலான பொதுவிவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்ல வாழ்க்கை குறித்தே இருக்கிறது, மேலும் அதற்கான வழியை கடவுள் ஏற்படுத்தி தருவார் என நம்புகிறேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.