ஆர்.ரவி ஷங்கர் எக்ஸ் தளம்
சினிமா

‘ஜனவரி மாதமே முயற்சி செய்தேன்..’ - மறைந்த பாடலாசிரியர் ரவி ஷங்கரின் உருக்கமான கடைசி கடிதம்!

Rishan Vengai, PT WEB

சூரிய வம்சம் படம் பட்டித்தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது என்றால், அப்படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலானது கிராமபுரங்களின் மூலைமுடுக்குகளிலும் சென்று ஒலிர்ந்தது.

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னவிட்டேன்,

உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்

- என்ற ரவிஷங்கரின் பாடல் வரிகள் காதலர்களின் விருப்பமான வரிகளாக இன்றளவும் இருந்துவருகிறது.

அதனைத்தொடர்ந்து வருசமெல்லாம் வசந்தம் படத்தை இயக்கி அதில் அனைத்து பாடல்களையும் எழுதிய ரவிஷங்கர், தன்னுடைய எழுத்து திறமையால் ‘எங்கே அந்த வெண்ணிலா, அடி அனார்களி, முதல்முதலாய் உன்னை பார்க்கிறேன்’ முதலிய ஹிட்டடித்த பாடல்களின் மூலம் இசைபிரியர்களை கட்டிப்போட்டார். அடுத்தடுத்து திரைத்துறையில் கொடிகட்டி பறக்கப்போகிறார் என விமர்சகர்களால் பார்க்கப்பட்டவர், கேட்பதற்கு கூட யாருமில்லாமல் இறந்தபிறகு சடலத்தை கைப்பற்றக்கூட யாருமில்லாமல் மரணித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியறையில் இறந்து கிடந்த பாடாலாசிரியர் ரவிஷங்கர்!

சென்னை கே.கே நகர் 10-வது செக்டார் 63வது தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் நேற்றைய முன்தினம் துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுமார் 63 வயதுடைய நபர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தற்கொலை செய்தகொண்ட நபருக்கு திருமணம் ஆகாத நிலையில், தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவுசெய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் உயிரை மாய்த்துக்கொண்ட நபரின் பெயர் ரவிஷங்கர் என்பதும், அவர் இயக்குநர் மற்றும் சூர்யவம்சம் ரோசாப்பூ முதலிய பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்பதும் தெரியவந்தது. திருமணமாகாத ரவிஷங்கர் நரம்புசுற்று நோய் மற்றும் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு கீழேவிழும் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததோடு, தொடர்ச்சியாக மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்துள்ளார்.

தொடர் சிகிச்சைக்கு பிறகும் உடல்நிலை சரியாகாத காரணத்தால், மோசமான உடல்நிலையோடு உயிர்வாழ முடியாது என்ற வேதனையுடன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மறுநாள் சடலத்திலிருந்து துர்நாற்றம் வீசவே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலை வாங்க கூட யாருமில்லாத நிலை!

ரவிஷங்கரின் மரணம் குறித்து மும்பை மற்றும் நியூசிலாந்தில் இருக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மும்பையில் இருக்கும் சகோதரி ராதா என்பவர், வயது மூப்பின் காரணமாகவும், உடல் நலக் கோளாறு காரணமாகவும் தன்னால் வர இயலாது என்று போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் இறந்ததாக தொடங்கிய விசாரணையில், அவருக்காக அழுவதற்கு கூட யாரும் அந்த இடத்திற்கு வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாலும், இயக்கத்தாலும் பலரை கவர்ந்தவருக்கு, உயிரிழந்த பிறகு உடலை மீட்டது முதல் மருத்துவமனையில் சேர்த்தது வரை யாருமே வராதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தனையையும் போலீஸாரே செய்த நிலையில், நியூசிலாந்தில் உள்ள அவரின் அண்ணனுக்கு தகவல் சொன்னதை அடுத்து அவர் நேரில் வருவதாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜனவரி மாதமே தற்கொலைக்கு முயற்சித்தேன்..

ரவிஷங்கரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த ரவிசங்கரின் கடைசி கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், “என்னால் உடல் நலக் கோளாறுடன் வாழ முடியவில்லை. கடந்த ஜனவரி மாதமே தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. எனது மரணத்திற்கு இதைத்தவிர வேற காரணம் இல்லை” என்று எழுதி வைத்துள்ளார்.

குறிப்பாக, இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக தனது நண்பரிடம் வாங்கிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை Gpay மூலமாக அனுப்பியதும் தெரியவந்தது. அன்றைய நாளோடு வீட்டை காலிசெய்ய இருந்த நிலையில், பொருட்களை எல்லாம் கட்டி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ரவிஷங்கர், 2002ஆம் ஆண்டு நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளிவந்த 'வருஷமெல்லாம் வசந்தம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரிய வம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற மிகப்பிரபலமான பாடலையும் இவரே எழுதியுள்ளார். பாக்யராஜ் நடத்தி வந்த 'பாக்யா' எனும் வார இதழில் சிறுகதைகளையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றில் ஆடும் கனியாக... என் பாட்டு மட்டும் துணையாக....

என்ற பாடல் வரிகளை பிரசவித்த ரவிஷங்கருக்கு, அவரது பாட்டு மட்டுமே துணையாக இருந்து போய்விட்டது பெரும் சோகமே!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.