சினிமா

"வாரிசு படம், பணத்தை மட்டுமில்ல... பாராட்டையும் சம்பாதித்து வருது”- நெகிழ்ந்த தில் ராஜூ

"வாரிசு படம், பணத்தை மட்டுமில்ல... பாராட்டையும் சம்பாதித்து வருது”- நெகிழ்ந்த தில் ராஜூ

webteam

வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை பிரசாத் லேப்-ல் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர்கள் சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சங்கீதா, பாடலாசிரியர் விவேக், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இயக்குநர் வம்சி “வாரிசு வெறும் படம் மட்டுமில்ல அது ஒரு நம்பிக்கை. விஜய் சார், தயாரிப்பாளர், படக்குழு என் மேல் வைத்த நம்பிக்கை. படம் முடிந்த சமயத்தில் `Are you happy sir?’ என விஜய் சார் கேட்பார். சக்சஸ் பார்ட்டியில் நான் விஜய் சாரிடம் `Are you happy sir?’ எனக் கேட்டேன். `I am very much happy’ என்றார். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், “இப்பவும் படத்தின் டிக்கெட் கிடைக்கவில்லை என பலரும் சொல்கிறார்கள். வம்சி சார்... தமிழர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவரை கொண்டாடுவார்கள். உங்களுக்கு இங்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். ரொம்ப வருடத்திற்கு முன்பு என் மகள், மனைவியுடன் போக்கிரி படம் பார்த்தேன். அதன் பிறகு தான் விஜய் ரசிகராக நான் மாறினேன்.

இப்போது அவருடனே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தில் ராஜூ சார், நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதை உணர முடிகிறது. படத்தின் வசூல் அந்த மாதிரி! நீங்கள் பேசும்போது மட்டும் அது இது என்று பேசாதீர்கள். அவங்க இவங்க என்று சொல்லவேண்டும் நான் அதை கற்றுக் கொடுக்கிறேன்” என்றார்.

பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான விவேக் பேசுகையில், “நான் வசனம் எழுதும் முதல் படமே விஜய் அவர்களின் படம் என்பது இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு முதல் நன்றி விஜய் அவர்களுக்குத்தான். பல்ப் ஃபிக்ஷன் வைத்து ஒரு மீம் டெம்ப்ளேட் இருக்கும்... `இதெல்லாம் ஒரு விஷயமாடா’ என. அதுபோல இந்தப் படத்திற்காக நடிப்பு, நடனம், பாடுவது என்ன கேட்டாலும் அதை கொடுத்திருக்கிறார் விஜய். இவ்வளவு பெரிய ஸ்டார் படத்தில் முதல் பாதி முழுக்க சண்டைக் காட்சி இல்லாமல் எடுப்பது சாதாரணம் கிடையாது. அதை வம்சி கச்சிதமாக செய்திருக்கிறார். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் தமன் பேசுகையில், “இந்த வெற்றிக்காக 27 வருடம் போராடியிருக்கிறேன். விஜய் சாரின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆவல். அப்படி இணையும் போது படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என நினைத்தேன். அது நடந்திருப்பது மன நிறைவாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் ஒருவர் மட்டுமல்ல, படத்தில் பணிபுரிந்த அனைவருமே காரணம்” என்றார்.

நடிகை சங்கீதா பேசுகையில், “'இந்த மேடையில் இருக்கும் யாருக்குமே நான் இதுவரை நன்றி கூறவில்லை. இப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். 80 படங்களுக்கு மேல் நான் நடித்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஓடிக் கொண்டே இருப்பேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாதது. விஜய் சாரை 25 வருடத்திற்கு முன்பு சந்தித்தேன். பிறகு இந்தப் படத்தில் தான் சந்தித்தேன். அப்போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் இருக்கிறார்” என்றார்.

நடிகர் ஷாம் பேசுகையில், “தயாரிப்பாளர் தில் ராஜூ இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ஒவ்வொரு நாளும் வந்து எல்லாவற்றையும் கவனிப்பார். அவரின் அர்ப்பணிப்பு தான் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியடைய வைத்திருக்கிறது. வம்சி சார் தமிழ் இயக்குநரா? தெலுங்கு இயக்குநாரா? என்று பார்க்க தேவையில்லை. அவர் ஒரு மனிதர், மனிதனின் அடிப்படை குணம் உணர்வுகள். அதை வைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார்” என்றார்.

தயாரிப்பாளர் தில் ராஜூ பேசுகையில், “தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் செய்திருக்கிறேன். ஏன் விஜய் சாருடன் அப்படி ஒரு படத்தை பண்ணக் கூடாது என ஆரம்பித்தது தான் வாரிசு. இந்தப் படம், பணம் மட்டுமில்லாமல் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “இந்தப் படத்தின் முதுகெலும்பு தில் ராஜூதான். அவருக்கு நன்றி. இந்த இடத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் எனக் கேட்டபோது மிக மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். வாரிசு படம் நன்றாக இருக்ககிறது என்று சொன்னால் துணிவு நன்றாக இல்லை என அர்த்தம் இல்லை. அந்தப் படமும் வெற்றியடைந்திருக்கிறது. ரசிகர்கள் தங்கள் நாயகர்களுக்காக மோதிக் கொள்ள வேண்டாம். இந்த இடத்தில் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்த அஜித் ரசிருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.