விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் சிறப்பான நாள் இன்று. அப்படி என்ன சிறப்பு? சரியாக 26 ஆண்டுகளுக்கு முன் கண்ணாடியில் தினம் அவர் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த அவரது முகத்தை வெள்ளித்திரையில் உலகம் முழுவதும் காணச் செய்த நாள் இன்றுதான்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதிதான் விஜயின் ‘நாளைய தீர்ப்பு’ வெளியானது. இந்தப் படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். அவரது அம்மா, ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்தார். இவருக்கு ஜீடியாக கீர்த்தனா நடித்திருந்தார். மூத்த நடிகை ஸ்ரீவித்யாவும் நடித்த படம் இது.
இந்தப் படம் வெளியாகி இன்றுடன் சரியாக 26 வருடங்களை கடந்துள்ளதால், தனது திரை வாழ்க்கையில் நிறைவு செய்திருக்கிறார் விஜய். அவரது முதல் படம் வெளியானபோது அவரது படத்திற்கு பெரிய அளவுக்கு சிறந்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. தந்தை இயக்குநர் என்பதால் எளிதில் திரைக்கு நுழைந்துவிட்டார் எனப் பலர் அவரை விமர்சித்தனர். அந்தப் படத்தில் விஜய்யின் நடிப்பைக் காட்டிலும் நடனம் நன்றாகவே இருந்தது.
1992ம் ஆண்டு தனது முதல் பயணத்தை தொடங்கிய விஜய், இந்த ஆண்டுடன் 62 படங்களை நடித்து முடித்திருக்கிறார். ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு ‘தளபதி63’ தயாராகி வருகிறது. ஆக, இந்த 26 ஆண்டுகளில் அவரது உழைப்பும் வெற்றியும் ஈடு இணையற்றதாக வளர்ந்திருக்கிறது.
முதல் படத்தில் விஜய் ஆக மலர்ந்து பிறகு ‘இளைய தளபதி’யாக வளர்ந்து இன்று ‘தளபதி’யாக உயர்ந்திருக்கிறார். அவரது ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறார்கள். கொண்டாடத்தக்க நடிகராக அவரது முதல் நாள் முதல் ஷோ மாறியுள்ளது.
‘தளபதி63’ படத்தினை அட்லி இயக்கி வரும் நேரத்தில் இந்தக் கொண்டாட்டம் கூடி வந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார்.
விஜயின் இத்தனை உயரத்திற்கும் அவரது உழைப்பும், தனித்துவமான நடனமும், அமைதியான அனுகுமுறையும்தான் காரணம் என்பது வெளிப்படையான ரகசியம்.