நடிகர் ரஜினிகாந்த் web
சினிமா

நடிகர் ரஜினிக்கு எதனால் உடல்நலக்குறைவு? அடுத்து என்ன செய்யவேண்டும்? மருத்துவர் அளித்த முக்கிய தகவல்!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு வயிற்று வலி, நெஞ்சு வலி என செய்திகள் பரவிய நிலையில், எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று இதயவியல் நிபுணர் சொக்கலிங்கம் விளக்கியுள்ளார்.

PT WEB

நடிகர் ரஜினிகாந்த் 30.09.2024 இரவு 10 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அவருக்கு, உடல் சோர்வு மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டு மருத்துவரின் ஆலோசனைபடிதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், திடீரென அனுமதிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால் வயிற்று வலியுடன், நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், இரண்டு தினங்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியானது.

இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது, தற்போது எப்படி இருக்கிறார் என்று புதியதலைமுறை உடன் பேசிய இதயவியல் நிபுணர் சொக்கலிங்கம் விளக்கியுள்ளார்.

நெஞ்சு வலியோ, மாரடைப்போ ஏற்படவில்லை..

அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வந்த இதயவியல் நிபுணர் சொக்கலிங்கம் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ரஜினிகாந்திடம் பேசினேன். சிகிச்சை முடிந்து நம்பிக்கையோடு இருக்கிறார். அவரிடம் கை கொடுத்தேன். ரஜினியின் மனைவி லதா மற்றும் அவரது மகள்களோடு பேசினேன்.

அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை முடிக்கப்பட்டுள்ளது. இதயத்தில் உள்ள மகா தமணியில் விரைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய ஸ்டண்ட் எனப்படும் ஸ்பிரிங் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய படம் ரஜினி

ரஜினிகாந்த் எனக்கு 50 வருட நண்பர். மருத்துவமனையில் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். ரஜினிகாந்திடம் நான் கேட்டேன் "என்னங்க ரஜினி எல்லாரும் உங்களை பற்றி தான் டிவியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றேன்". நீங்கள் என்னை பற்றி சொல்லும் தகவல் மக்களை மகிழ்வித்து இருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான் என்றார் ரஜினி.

நாளை மறுநாள் வீட்டிற்கு சென்று விடலாம் வீட்டிற்கு சென்ற பிறகு சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியது வரும். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் பெரிய தமனி தான் Aorta என்கிறார்கள். நண்பர் ரஜினிகாந்துக்கு வயிற்றில் உள்ள மகா தமணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகா தமணியில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

ரஜினி

இப்போதெல்லாம் ரஜினி புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டார். அதிக டென்ஷன் காரணமாக மகா தமனியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். ரத்த கொதிப்பு ஒரு காரணமாக உள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டு தான் சிகிச்சை நடைபெற்றதே ஒழிய, மாரடைப்பு ஏதும் ஏற்பட்டு அவசர சிகிச்சையாக அனுமதிக்கப்படவில்லை. சூட்டிங் முடிந்தவுடன் இதய தமணியில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்கிற திட்டத்தோடு தான் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னும் காலதாமதம் ஆயிருந்தால் சிகிச்சை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கும்.

ரஜினி

ஒன்பது வருடத்திற்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அறுவை சிகிச்சை செய்தோம். தற்போது இதய தமணியில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடலின் மற்ற பாகங்கள் பலமாக இருப்பதால்தான் ரஜினிகாந்த்துக்கு சிகிச்சை கொடுக்க முடிகிறது. அவர் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.