“தமிழக அரசுக்கு மிகப் பெரிய நன்றி” - நடிகை குஷ்பு
திரைத்துறை மற்றும் சின்னதிரைகளில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்த அரசுக்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிரப் பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதில் திரைத்துறையும் முடக்கப்பட்டதால் அதில் பணியாற்றும் அடித்தட்டு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மே 17 வரை நீட்டித்தது.
மேலும் தளர்வுகள் குறித்த முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது. அதன்படி தமிழகத்தில் தலைக் கடைகள், மதுபானக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. அத்துடன் திரைத்துறை மற்றும் சின்னதிரைகளில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளைச் செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு இன்று அறிவித்தது.
இந்நிலையில் அரசின் இந்த அனுமதி குறித்து நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “ திரைத்துறை மற்றும் சின்னதிரைகளில் படப்படிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்த செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முதல்வர் பழனிசாமிக்குச் சின்னதிரை சார்பாக மிகப் பெரிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.