சினிமா

‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி போலீசில் மனு

‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி போலீசில் மனு

webteam

‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ‘திரௌபதி’. இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. விழுப்புரத்தை பின்புலமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் வேறு சமூகத்தை சார்ந்த பெண்களை திருமணம் செய்பவர்களை குறிப்பிட்டும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வசனங்களை குறிப்பிட்டு பேசும்படியும் சில வசனங்கள் உள்ளன. இதனைப் பலரும் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ‘திரெளபதி’ பாத்திரத்தை குறித்து இயக்குநர் சில விளக்கங்களை அளித்திருந்தார்.

இந்நிலையில் டிரெய்லரில், சாதி ஆணவக்கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் அந்தப் படத்தை தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் அமைதி நிலவ இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். டிரெய்லரில் உள்ள வசனங்களை பார்க்கும்போது தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதி தந்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற அறிவுத்தலை இந்தப் படத்தின் காட்சிகள் மீறி உள்ளது. காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மேற்கொண்டு உயர் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அதையும் மீறி படம் வெளியானால் போராட்டம் நடத்துவோம்”என விளக்கம் அளித்துள்ளார்.