நடிகர் நாகர்ஜுனா web
சினிமா

நில ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக வருமானம்.. நடிகர் நாகர்ஜுனா மீது புகார்!

நடிகர் நாகர்ஜுனா நில ஆக்கிரமிப்பு மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்தாகவும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் காவல்நிலையைத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அரங்கம் ஒன்று சமீபத்தில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஹைதராபாத் பேரிடர் பதில் மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனமான (HYDRA) ஹைட்ரா, ஹைதராபாத்தில் உள்ள தும்மிடிகுண்டா ஏரியின் எஃப்டிஎல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறி, நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அரங்கம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் இடித்தது.

அறிக்கைகளின்படி, இடிக்கப்பட்ட N-Convention மையமானது மாதாப்பூர் பகுதியில் உள்ள தம்மிடிகுண்டா ஏரியின் ஃபுல் டேங்க் லெவல் (FTL) பகுதி மற்றும் தாங்கல் மண்டலத்தில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. எஃப்டிஎல் பகுதியில் சுமார் 1.12 ஏக்கரையும், தாங்கல் பகுதியில் கூடுதலாக 2 ஏக்கரையும் ஆக்கிரமித்து என்-கன்வென்ஷன் சென்டர் கட்டப்பட்டதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் அந்த நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நாகர்ஜுனாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நாகர்ஜுனா மீது புகார்..

நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா மீது நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஜனம் கோசம் மானசாக்ஷி அறக்கட்டளையின் தலைவர் காசிரெட்டி பாஸ்கர ரெட்டி என்பவர் மாதாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல நூறு கோடிகள் மதிப்பிலான 3.30 ஏக்கர் நிலத்தில், விதிகளை மீறி என்-கான்வென்ஷன் சென்டரை நாகார்ஜுனா கட்டியதாக குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு நிலத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பதாகவும், அதன்பேரில் நடிகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் சம்பாதித்த பணத்தை மீட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் நில ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்திருந்த நாகர்ஜுனா, ஒரு சென்ட் நிலம்கூட ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவில்லை என்று கூறி, ஆந்திர நில அபகரிப்பு (தடை) சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தும்மிடிகுண்டா ஏரியில் எந்த ஆக்கிரமிப்பும் நடக்கவில்லை என்று தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இந்தவிவகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.