சினிமா

கல்லூரி மாணவன் தொடங்கி கமர்ஷியல் "Beast" வரை - விஜய்யின் வெற்றிப்பயணம்

கல்லூரி மாணவன் தொடங்கி கமர்ஷியல் "Beast" வரை - விஜய்யின் வெற்றிப்பயணம்

Sinekadhara

அடுத்தடுத்து வெற்றிப் படங்கள், நூறு கோடியைத் தாண்டிய வியாபாரம், லட்சக்கணக்கான ரசிகர்கள் என தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அவரது 47-வது பிறந்தநாளான இன்று, கல்லூரி மாணவனாக தொடங்கி கமர்ஷியல் "Beast" ஆனது வரையான வெற்றிப்பயணத்தை சுருக்கமாக பார்க்கலாம்.

இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இப்போது தளபதியாக மாறியிருக்கும் நடிகர் விஜய்க்கு, சிறுவயது முதலே சினிமாவின்மீது காதல் தொற்றிக்கொண்டது. இதனால், தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், இயக்கிய 'வெற்றி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றினார். தொடர்ந்து சில படங்களிலும் தலைகாட்டிய அவரை, 'நாளைய தீர்ப்பு' நாயகனாக்கியது. 'விஷ்ணு', 'சந்திரலேகா' என மினிமம் கியாரண்டி நடிகராக தன்னை தக்கவைத்துக் கொண்டிருந்த விஜய்யை, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடிய திரைப்படம் 'பூவே உனக்காக'. அதற்குப் பிறகு 'காதலுக்கு மரியாதை', 'லவ் டுடே', 'ஒன்ஸ்மோர்' என விஜய்யின் திரைப்பயணம் ஏறுமுகமாகவே அமைந்தது.

தொடர்ச்சியாக காதல் களங்களில் நடித்து வந்த விஜயை, 'குஷி', 'ப்ரெண்ட்ஸ்', 'பத்ரி' போன்ற படங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் காட்டின. ஆக்‌ஷன் ஹீரோவாக விஜய்க்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தப் படம் 'திருமலை'. அந்தப் படத்திற்குப் பிறகுதான், 'கில்லி', 'திருப்பாச்சி', 'போக்கிரி' என ஆக்‌ஷன் பாதையில் பயணிக்கத் தொடங்கினார். அதன்பிறகுதான், விஜய்க்கு அரசியல் ஆர்வம் எட்டிப் பார்க்கத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகே, சர்ச்சைகளும் விஜய்யை வட்டமடிக்கத் தொடங்கின. அதிலும், TIME TO LEAD வாசகத்திற்காக, ’தலைவா’ படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது போன்றவை, அவருக்கு ரசிகர்கள் பலத்தை அதிகரிக்கவே செய்தது எனலாம்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு விஜய் படம் என்றாலே சர்ச்சையில்லாமல் வெளியாகாது எனும் நிலை ஏற்பட்டது. ’துப்பாக்கி’, ’கத்தி’, ’மெர்சல்’ என விஜய்யின் பல படங்களும் பெரும் சர்ச்சைகளை சந்தித்தன. அதே நேரம், 100 கோடி ரூபாயைத் தாண்டிய வியாபாரமும் நடந்து சாதனைப் படைத்தன.

தொடர்ந்து, விஜய் நடிக்கும் படங்களை மாநில எல்லைகளைக் கடந்து எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கியிருப்பதும் அதற்குப் பிரதான காரணம். அதற்கேற்பவே, ’மாஸ்டர்’, ’பீஸ்ட்’ என எல்லா மொழி ரசிகர்களுக்குமான கதைகளை அடுத்தடுத்து தேர்வுசெய்து நடித்து வருகிறார். அவ்வப்போது மேடைகளில் அரசியல் பேசுவது, வாக்களிக்க சைக்கிளில் வந்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளையும் தவறாமல் அரங்கேற்றுகிறார். இதனால், திரைப்படங்களில் தொடர்வதோ, தீவிர அரசியலில் இறங்குவதோ? எதுவானாலும் விரைவில் அறிவிக்க வேண்டும் என காத்துக் கிடக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். முடிவு விஜய்யின் ஒற்றை சொல்லிலேயே இருக்கிறது.