மெய்யழகன் திரைப்படம் PT
சினிமா

’மனதின் ஓரத்தில் காய்ந்து கிடக்கும் சொந்தமண்ணின் பசுமைகள்..’ - மனம் கவரும் மெய்யழகன் ட்ரெய்லர்!

Rishan Vengai

சிறந்த காதல் படைப்புகளுக்கு தமிழ்திரையுலக ரசிகர்களின் மனங்களில் எப்போதும் தனிஇடம் உண்டு. அந்தவகையில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த காதல் உலகையும், இளைஞர்களின் மனதையும் கட்டிப்போட்ட திரைப்படம் என்றால் அது ’96’. எல்லோருடைய பள்ளிப்பருவ காதல் படலங்களையும் அசைத்துவிட்டுச்சென்ற 96 திரைப்படம், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்துவிதத்திலும் ரசிகர்களின் நெஞ்சத்தில் மறக்கமுடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச்சென்றது.

96

ராமாக விஜய் சேதுபதியும், ஜானுவாக திரிஷாவும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருந்தனர். நடிப்பில் ஒருபுறம் அவர்கள் மயிலிறகால் வருடினார்கள் என்றால், மறுபுறம் ஒருமுறையாவது அவர்கள் இருவரும் சிறிய அணைப்பிற்குள்ளாவது தங்களை இருநிமிடங்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தை ரசிகர்களுக்கு விதைத்து, பின்னர் இல்லை இதுதான் அவர்களின் கதாபாத்திரங்களுக்கான அழகியல் என்று எல்லோருடைய ஆத்மார்த்தமான பாராட்டையும் பெற்றுச்சென்றிருப்பார் இயக்குநர் பிரேம் குமார்.

96 movie

இப்படி மறக்கமுடியாத பள்ளிப்பருவ காதல் கதையை விருந்தாக படைத்த இயக்குநர் பிரேம் குமார், தற்போது மெய்யழகன் என்ற படைப்பின் மூலம் சொந்தமண்ணை விட்டு எங்கோ மூலையில் யாருமாற்று இருக்கும் நபர்களின் ஏக்கத்தையும், உறவுகளின் உன்னதத்தையும், பால்யத்தில் கடந்துவந்த சிறுவயது உறவுகளின் பாசத்தின் பிணைப்பையும் அசைத்து பார்க்கும் ஒரு சினிமாவை படமாக்கியுள்ளார் என்று ட்ரெய்லர் பார்க்கும் போது வெளிப்படுகிறது.

மனம் கவரும் மெய்யழகன் ட்ரெய்லர்..

96 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, கார்த்தி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோதிகா - சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். திரைப்படமானது வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரானது இன்று வெளியானது.

மெய்யழகன்

ட்ரெய்லரானது சொந்த மண்ணையும், உறவுகளையும் விட்டு எங்கோ மூலையில் இருக்கும் ஒருவன், மீண்டும் தன் ஊருக்கு ஒருநாள் செலவதும், அப்போது நடக்கும் நிகழ்வுகளுமாக படம் அமைந்திருப்பதாக தெரிகிறது.

மெய்யழகன்

கடந்த 96 படத்தில் சிறுவயது பள்ளிப்பருவ படலத்தை தூசுதட்டி எல்லோரையும் அழவைத்த பிரேம்குமார், இந்தமுறை உறவையும், சொந்த மண்ணின் பிணைப்பையும் கையில் எடுத்துள்ளார். ட்ரெய்லர் பார்க்க பார்க்க அவ்வளவு அமைதியாகவும், இதமாகவும் இருக்கிறது.

நீங்க ஒருநாள் ஊருக்கு வந்துட்டு போறத, ஒரு வருசம் முழுக்க சொல்லிட்டே இருப்பாரு, அவருக்கு உங்கள ரொம்ப புடிக்கும்’ என்ற வசனமும், அத்தான் என அழைக்கும் கார்த்தியின் உறவில் இருக்கும் கலப்படமற்ற அன்பை பார்த்து மிரளும் அரவிந்த்சாமியும், ட்ரெய்லரின் இறுதியில் வரும் கமல்ஹாசனின் குரலும் ட்ரெய்லர் பார்த்தபிறகும் நம்மை ஒட்டியே இருக்கின்றன. நிச்சயம் மீண்டுமொரு ஆத்மார்த்தமான விடைபெறுதலோடு ரசிகர்களை திரையரங்கை விட்டு இயக்குநர் பிரேம்குமார் அனுப்புவார் என்று தெரிகிறது.