சினிமா

ஃபிலிம்ஃபேர் அவார்ட்ஸ் 2019 : விருதை தட்டிச் சென்ற தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி

ஃபிலிம்ஃபேர் அவார்ட்ஸ் 2019 : விருதை தட்டிச் சென்ற தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி

webteam

இந்த ஆண்டிற்கான தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள் முறையாக வழங்கப்பட்டுள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில், 2019 ஆண்டிற்கான 66 வது ‘ஃபிலிம்ஃபேர்’ விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டனர். கடந்த 66 ஆண்டுகளாக திறமையான திரைக் கலைஞர்களை கண்டறிந்து கொடுக்கப்பட்டு வரும் இந்த விருதிற்கு சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் ஒரு கெளரவம் உள்ளது. ஆகவே இந்த ஆண்டு யாருக்கு என்ன விருது கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

குறிப்பாக இந்த ஆண்டு சில இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். அவர்களின் திறைமைக்கு இது ஒரு அங்கீகாரமாக இருக்கும் இருக்கும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இவ்விழாவை நடிகை ரெஜினா கசாண்ட்ராவும் சுதீப் கிஷன் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர். விழா நிகழ்ச்சியால் இரவு முழுவதும் உற்சாக களைகட்டியது. நடிகர்கள், நடிகைகளின் கலை நிகழ்ச்சியால் ரசிகர்கள் மகிழ்ச்சி மழையில் நனைந்தனர்.

சிறந்த படங்களுக்கான பட்டியலில், விஜய் சேதுபதியின் ‘96’, கதிர் நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, விஷ்ணு விஷாலுக்கு சிறந்த பெயரை ஈட்டித் தந்த ‘ராட்ச்சசன்’, விஜய் நடித்திருந்த ‘சர்கார்’, சென்னையின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை எடுத்துக் காட்டிய தனுஷின் ‘வடசென்னை’ என சில படங்கள் மோதின. இதில் இடம்பெற்றிருந்த அனைத்து படங்களும் அதனதன் அளவில் தனித்துவம் கொண்டவையாக தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆகவே விருதிற்கான படத்தை தேர்வு செய்வது நெருக்கடியான விஷயமாக பார்க்கப்பட்டது. இந்தப் போட்டிகளில் நடுவே மோதி, சிறந்த படமாக இயக்குநர் மாரிசெல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ படம் விருதை தட்டிச் சென்றது.

இதனை அடுத்து சிறந்த இயக்குநருக்கான தேர்வு பட்டியலில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’, மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’, ராம் குமார் இயக்கத்தில் வந்த ‘ராட்ச்சசன்’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’படங்கள் மோதின. ஒரே ரசனையில் இல்லாமல் பல ஜானர்களின் இயக்குநர்களை தேர்வு செய்திருந்ததால் போட்டியும் கடுமையாக இருக்கும் என ஊகம் நிலவியது. இந்த மோதல்களில் முன்னேறி, சிறந்த இயக்குநராக ‘ராட்ச்சசன்’ ராம் குமார் சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிக் கொண்டு சென்றார்.

ஒரு படத்தில் கதையை இயக்குநரே தேர்வு செய்கிறார். ஆனாலும் அவருக்கு கிடைக்கும் பெயரைவிட அதிக புகழ் நடிகருக்குதான் போகும். இது சினிமாவில் விதி. ஆக, நல்ல படம் என்பதை தாண்டி, நல்ல நடிகர் என்ற விருதிற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனடிப்படையில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் இந்த ஆண்டு, ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்காக அரவிந்த் சாமி, ‘வடசென்னை’க்காக தனுஷ், ‘சர்கார்’ படத்திற்காக விஜய், ‘96’ படத்திற்காக விஜய்சேதுபதி விருது பட்டியலை அலங்கரித்தனர். இக்கட்டான இந்த மோதலில் இறுதியாக இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது இரண்டு பெயருக்கு வழங்கப்பட்டது. ‘வடசென்னை’க்காக தனுஷூக்கும் ‘96’ விஜய்சேதுபதிக்கும் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டு அரங்கமே ஆரவாரத்தால் அதிர்ந்தது.


சிறந்த நடிகர் தேர்வு முடிந்தால் அடுத்த கவனம் எங்கே போகும்? சிறந்த நடிகைக்குதானே? இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதிற்கான பட்டியலில் ‘கனா’ படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காற்றின் மொழி’ படத்திற்காக ஜோதிகா, ‘கோலமாவு கோகிலா’வுக்காக நயன்தாரா, ‘மாரி 2’ படத்திற்காக சாய் பல்லவி, ‘96’ படத்திற்கா த்ரிஷா என பலரும் மோதினர். இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘ஜானு’ தட்டிக் கொண்டு சென்றார். என்ன ஜானுவா? என்கிறீர்களா? அதாங்க த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம்பிடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கனா’வில் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக விமர்சகர்கள் சார்பில் வழங்கப்படும் (கிரிட்டிக் அவார்ட்) சிறந்த நடிகையாக விருது ஐஸ்வர்யா ராஜேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்தற்காக அரவிந்த் சாமி தட்டிச் சென்றுள்ளார்.

மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருது ‘கனா’ சத்யராஜூக்கு கிடைத்துள்ளது. இதே பிரிவில் வழங்கப்படும் நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணன் பெற்றுள்ளார். ‘கோலமாவு கோகிலா’வில் இவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுதியதற்காக இந்த விருது இவருக்கு கிடைத்துள்ளது.

சிறந்த அறிமுக நடிகைக்கான விருது ‘பியார் ப்ரேமா காதல்’ பட நாயகி ரைசா வில்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் யார் என்ற பட்டியலில் ‘கோலமாவு கோகிலா’ அனிருத், ‘96’ கோவிந்த் வசந்தா, ‘செக்கச்சிவந்த வானம்’ ஏ.ஆர்.ரஹ்மான், ‘பரியேறும் பெருமாள்’ சந்தோஷ் நாராயணன், ‘பியார் பிரேமா காதல்’ யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மோதலில் முந்திக் கொண்டு வந்து, ‘96’ கோவிந்த் வசந்தா விருதை தட்டிச் சென்றுள்ளார்.