சினிமா

ஃபிலிம்ஃபேர் விருதிற்கான தேர்வு பட்டியல்: யார், யாருக்கெல்லாம் இடம்..?

ஃபிலிம்ஃபேர் விருதிற்கான தேர்வு பட்டியல்: யார், யாருக்கெல்லாம் இடம்..?

webteam

66-ஆவது ஃபிலிம்ஃபேர் விருது பட்டியலில் யார் யார் எல்லாம் இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இந்திய திரைநட்சத்திரங்கள் தங்களுக்கான பெரிய அங்கீகாரமாக ‘ஃபிலிம்ஃபேர் அவார்டு’களை கருதுகிறார்கள். ஆகவேதான் அந்த விருது பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தென்னிந்திய திரைப்படத்திற்கான 66-வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் நாளை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் வழங்கப்பட உள்ளன. 66 ஆண்டுகளாக இந்த விருதுக்கான விழா நடைபெறுகிறது என்றால் இந்த விருதின் சிறப்பு எளிதாக பிடிபட்டுவிடும்.

2019 ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் எந்தப் படத்திற்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது- யார் எல்லாம் தேர்வு பட்டியலில் இருக்கிறார்கள்? என பல கேள்விகளுக்கான விவரங்கள் தெரிய வந்துள்ளன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிறந்த திரைப்படங்கள்

இந்த ஆண்டு சிறந்த படத்திற்கான விருது பட்டியலில் பல படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முதல் இடத்தில் நிற்பது விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான ‘96’. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கான காதல் உணர்வுகளை பிரதானமாக கொண்டு பேசிய இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் திரும்பி பார்க்கும் படமாக இருந்தது. பலரும் ‘ஜானு’வை நினைத்து உருகி நின்றார்கள். அந்த பெயரே ஒரு கட்டத்திற்குப் பிறகு வைரலாக மாறியது. அதனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘செக்கச்சிவந்த வானம்’. பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடித்திருந்த திரைப்படம்.

அடுத்து ‘பரியேறும் பெருமாள்’. சாதிய வன்முறையை கலை அமைதி குறையாமல் பேசிய படம். பலரும் தங்களின் சுயசாதி பெருமை பேசுவதை குறித்து யோசிக்க வைத்த படம். இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு தயாரிப்பாளராக அடையாளம் உண்டாக்கி கொடுத்த திரைப்படம். இதற்குப் பின் ‘ராட்ச்சசன்’. இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட தனித்துவம் மிக்க படமாக இது இருந்தது. இதுவரை கதை, மற்றும் இயக்க யுக்திகளை பிரதானப்படுத்திய இந்தத் திரைப்பட வரிசையில் ஒரு கமர்ஷியல் மற்றும் கதாநாயகனை மையப்படுத்தி வெளியான விஜயின் ‘சர்கார்’ படமும் இடம்பிடித்துள்ளது.

மேற்கொண்டு தனுஷ் நடிப்பில் உருவான ‘வடசென்னை’. ‘ப்ரீயட் ஃபிலிம்’ வகையை சேர்ந்த இந்தப் படம் தனுஷுக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் பெரும் பேரை சம்பாதித்து கொடுத்த படமாக அமைந்தது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரைப்பை அடையாளப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு எதிராக சில சர்ச்சைகளும் எழுந்தன. பட்டியலில் உள்ள இந்த ஏழு படங்களில் எந்தப் படம் இந்த ஆண்டிற்கான விருதை தட்டி வரப் போகிறது என்பதை அறிய நாம் நாளை மாலை வரை காத்திருக்க வேண்டும்.

சிறந்த இயக்குநர்கள்

இந்த ஆண்டிற்கான சிறந்த இயக்குநர்களுக்கான இயக்குநர் பட்டியலில் முதலில் இருப்பவர் மணிரத்னம். ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்காக இந்தத் தேர்வு பட்டியலில் இவர் இருக்கிறார். அடுத்து ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்காக மாரி செல்வராஜ். இவருக்குப் பின் ‘சர்கார்’ படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ் இடம்பெற்றுள்ளார். சிறந்த படங்களுக்கான பட்டியலில் முதலில் இருக்கும் ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர்களுக்கான பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். அடுத்து இருப்பவர் ‘ராட்ச்சசன்’இயக்குநர் ராம் குமார். இதன் பிறகு பட்டியலில் ‘வடசென்னை’க்காக வெற்றிமாறன் இடம்பெற்றுள்ளார்.

சிறந்த நடிகர்

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்ததற்காக அரவிந்த் சாமியின் பெயர் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பிடித்துள்ளது. அடுத்து ‘வடசென்னை’ தனுஷ் இருக்கிறார். இவருக்கு அடுத்து ‘சர்கார்’ விஜய் உள்ளார். மேலும் ‘96’ பட நாயகன் விஜய்சேதுபதி இடம்பிடித்துள்ளார்.

சிறந்த நடிகை

சிறந்த படங்களுக்கான பட்டியலில் இடம்பெறாத திரைப்படம் ஒன்று, சிறந்த நடிகைக்கான தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ‘கனா’வில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகைகள் தேர்வு பட்டியலில் முதலில் உள்ளார். அடுத்து ‘காற்றின் மொழி’ ஜோதிகா. ‘கோலமாவு கோகிலா’வில் நடித்தமைக்காக நயன்தாராவின் பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதனை அடுத்து ‘மாரி 2’ படத்திற்காக சாய் பல்லவியும் இடம்பெற்றுள்ளார். சிறந்த படங்களின் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் ‘96’கதாநாயகி த்ரிஷா, சிறந்த நடிகை தேர்வுக்கான பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.

சிறந்த இசையமைப்பாளர்

‘கோலமாவு கோகிலா’ இசையமைப்பாளர் அனிருத் தான் சிறந்த இசையமைப்பாளர் தேர்வு பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்து ‘96’ இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளார். ‘செக்கச்சிவந்த வானம்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் தரவரிசைபடி மூன்றாவது உள்ளது. மேலும் ‘பரியேறும் பெருமாள்’ சந்தோஷ் நாராயணன், ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் பெயர் இறுதியாக இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் மேற்படியான எந்த விருது வரிசையிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சிறந்த பாடகர்

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு முன்பே அந்தப் படத்தின் பாடல் வெற்றி பெற்றுவிடும். சில நேரங்களில் படமே வெற்றி பெறாதது. ஆனால் அந்தப் படத்தில் இடம்பிடித்துள்ள பாடல் வெற்றி பெற்றுவிடும். அந்த அளவுக்குப் பாடல் பற்றிய ஆர்வம் மக்களிடம் அதிகம் உண்டு. இந்தப் பட்டியலில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘கல்யாண வயசுதான்’ படலை பாடியதற்காக அனிருத் பெயர் விருது பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு’ பாடலுக்காக அந்தோனி தாசன் பெயர் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு யூடியூப் வலைத்தளத்தில் வைரலான ‘மாரி 2’ படத்தின் ‘ரெளடி பேபி’ பாடலை பாடியதற்காக தனுஷ் மூன்றாவது இடத்தில் உள்ளார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ‘ஹே பெண்ணே’ பாடலுக்காக சித் ஸ்ரீராம் பெயர் இறுதியாக இடம்பெற்றுள்ளது.

சிறந்த பாடகி

‘96’ படத்தின் ‘காதலே காதலே’ பாடலை பாடியதற்காக சின்மயி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்து ‘மாரி2’ படத்தில் ‘ரெளடி பேபி’ பாடலை பாடிய ‘தி’ இருக்கிறார். அதாவது தீக்‌ஷித வெங்கடேசன். ‘சர்கார்’ ஒஎம்ஜி பாடலுக்காக ஜோனிதா காந்தி இருக்கிறார். ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூமி பூமி’ பாடலுக்காக சக்திஸ்ரீ கோபாலன் உள்ளார். இறுதியாக ‘2.0’ படத்தில் ஒலித்த ‘எந்திர லோகத்து’ பாடலுக்காக ஷாஷா திருப்பதி இருக்கிறார்.