சினிமா

கூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி

கூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி

rajakannan

‘சர்கார்’ திரைப்படத்தில் பேசப்பட்ட 49-பி குறித்து கூகுளில் ஏராளமானோர் தேடியுள்ளது தெரிய வந்துள்ளது.

கதை திருட்டு சர்ச்சைகளுக்கு நடுவே, விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். கள்ள ஓட்டு என்ற கருத்தினை மையமாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

கதைப்படி வெளிநாட்டிலிருந்து ஓட்டு போடுவதற்காக தாயகம் திரும்புகிறார் விஜய். ஆனால், விஜய்யின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டு விடுகிறார்கள். பின்னர், தான் ஒரு என்.ஆர்.ஐ என்பதால் பாஸ்போர்ட் உதவியுடன் தான் ஓட்டு போட முடியும் என்பதன் அடிப்படையில் கள்ள ஓட்டு போட்டவரை கண்டுபிடிக்கிறார் விஜய். அதோடு, கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்ட தனது ஓட்டு மீண்டும் தானே போடுவதற்காக சட்டத்தில் உள்ள பிரிவுகளை அலசி ஆராய்கிறார். அப்போதுதான், சட்டத்தில் உள்ள 49-பி என்ற பிரிவினை கண்டறிந்து நீதிமன்றத்தில் முறையிடுகிறார். 

வாக்குப்பதிவின் போது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற கருத்தினை பதிவு செய்ய 49-ஓ என்ற பிரிவை பயன்படுத்தலாம் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்தது. 49-ஓ என்ற பெயரில் கவுண்டமணி நடித்த படமும் வெளியாகி இருந்தது. அந்த வகையில் ‘சர்கார்’ படத்தில் பேசப்பட்ட 49-பி குறித்து சமூக வலைத்தளங்களில் படம் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தனர். 

இதனை பார்த்த பலரும் அது என்ன 49-பி பிரிவு? என்று கூகுளில் வைரலாக தேடியுள்ளனர். பலரும் தேடியதால், இணைய தேடலில் 49-பி முன்னிலை பெற்றுள்ளது.