சினிமா

கடவுள் களத்தில் இறங்கி 30 வருடமாச்சு: மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கொண்டாட்டம்

கடவுள் களத்தில் இறங்கி 30 வருடமாச்சு: மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கொண்டாட்டம்

webteam

இன்று இணையத்தையே கலக்கி கொண்டிருக்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் கடவுளாக விளங்கும் நடிகர் வடிவேலு திரையுலகிற்கு வந்து இன்றுடன் 30 வருடமாகிறது. வடிவேலுவின் 30 வருட வெற்றிப்பயணத்தை சமூக வலைதள வாசிகள் #30YrsOfMCsGodVADIVELU என்ற ஹேஷ்டேக் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

திரையுலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும், காமெடி என்றால் மீம்ஸ் போடுறதுக்கு கரெக்ட் ஆன ஆளு வடிவேலுதான். எல்லா அரசியல் நையாண்டிக்கும் சித்திரமாக விளங்கும் வடிவேலுவின் வசனங்கள்தான் எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் உதவிக்கு வரும் நச் வசனங்கள்.

சில நாட்களாக வைகைப் புயலின் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ மீம்ஸ்கள் வெற்றிகரமாக பரபரக்கின்றன. மீம்ஸ் மட்டுமல்ல; நாம் தினம் தினம் நண்பர்களுடன் பேசும் வார்த்தைகளில் கூட வடிவேலுவின் வசனங்களை பேசாமல் நகர்வதில்லை. இன்றைய இளசுகளின் பொழுதுபோக்காக இருக்கும் டப்ஸ்மாஷ், மீம்ஸ் போன்ற சேட்டைகளுக்கு மிகப்பெரிய சக்தியாகவும், மிக அதிக அளவில் இமிட்டேட் செய்பவராகவும் திகழ்பவர் வடிவேலு.  

நம் அன்றாடப் பேச்சுகளில் உலாவரும் நக்கல், நையாண்டி, எடக்கு, மடக்கு போன்றவற்றை அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் திரை முன் பிரதிபலிப்பவர் வடிவேலு. பிறர் கேலி செய்வதையே நம்மால் தாங்கி கொள்ள முடியாது. ஆனால் தன்னை கேலி செய்து பிறர் சிரிப்பதை அசால்டாக எடுத்து கொள்ளும் வித்தையே வடிவேலுவின் வெற்றி.

’என் தங்கை கல்யாணி’யில் சிறிய கதாபாத்திரம் மூலம் அடி எடுத்து வைத்த வடிவேலு  திரையுலகில் கால் பதித்து இன்றோடு 30 வருடமாகிறது. அதன் பின் ‘என் ராசாவின் மனசிலே’அவருக்கு தனிப் புகழ் தந்தது. அதன் பின் தமிழ் சினிமாவில் அவரது ராஜாங்கம் தொடங்கியது. பாடி சோடா, கைப்புள்ள, 'செட்அப்' செல்லப்பா, மொக்கச்சாமி, 'புல்லட்' பாண்டி, 'தீப்பொறி' திருமுகம், 'படித்துறை' பாண்டி, 'நாய்' சேகர், 'சலூன் கடை' சண்முகம், 'அலார்ட்' ஆறுமுகம் போன்ற கதாபாத்திரங்கள் நினைத்தாலே சிரிக்க வைக்கும் பக்கா காமெடி அவதாரங்கள்.

ஷப்பா... இப்பவே கண்ண கட்டுதே, வட போச்சே, ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ, மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு, ஆணியே புடுங்க வேணாம், ஹைய்யோ ஹைய்யோ, ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி, எதையுமே பிளான் பண்ணி பண்ணனும், பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மென்ட் வீக்கு, ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினீஷிங் சரியில்லையப்பா, அந்த குரங்கு பொம்ம என்ன விலை, அவ்வ்வ்வ்வ்...  போன்ற பல டயலாக்குகள் இன்றும் நம் அன்றாட வாழ்வில் புழக்கத்திலே உள்ளன.

டயலாக் முதல் எக்ஸ்பிரஸன்ஸ் வரை வைகைப் புயலை ரீபிளேஸ் செய்ய யாரும் இன்னும் வரவில்லை என நெட்டிசன்கள் வடிவேலுவின் 30 வருட வெற்றிப் பயணத்தை கொண்டாடி வருகின்றன.