சினிமா

கிரிஷ் கர்னாட் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

கிரிஷ் கர்னாட் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

webteam

கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரபல குணசித்திர நடிகர் கிரிஷ் கர்னாட் பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 81. உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1938-ஆம் ஆண்டு பிறந்த கிரிஷ் கர்னாட் தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், ’நான் அடிமை இல்லை’, ‘செல்லமே’, ‘ஹேராம்’, ’காதலன்’, ‘ரட்சகன்’, ’முகமூடி’, ‘24’   உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல், நாடகங்களிலும் பங்காற்றி வந்தவர் இவர். இவரது ’திப்பு சுல்தான் கண்ட கனசு’ என்ற நாடகம் உலக புகழ்பெற்றதாகும். இவர் எழுதிய பல நாடகங்கள் ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

10 தேசிய விருதுகளை வென்றவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார். கிரிஷ் கர்னாட்டின் ‘ராக்ட் கல்யாண்ட்’ சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 கிரிஷ் கர்னாட்டின் மறைவு, இலக்கிய உலகத்தில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பல நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்ற னர். 

இந்நிலையில், கிரீஷ் கர்னாட் மறைவுக்காக கர்நாடக அரசு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அரசு சார்பில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.