'தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களாக வலம் வருபவர்களில் நடிப்பு, நடனம், காமெடி என அனைத்தும் கலந்த அசத்தல் நடிகராக முன்வரிசையில் இருப்பவர்களில் விஜய் முக்கியமானவர்' என்பது சினிமா விமர்சகர்கள் பலரது பார்வை. சினிமாவில் விஜய் முதன்முறையாக நடிகராக அறிமுகமான 'நாளையத்தீர்ப்பு' இதே டிசம்பர் 4 ஆம் தேதிதான் வெளியானது. இதனையொட்டி, ட்விட்டரில் #28YearsOfVIJAYISM என்ற ஹேஷ்டேக்கில், அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து பதிவுகளைக் கொட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்தார்கள்; வென்றார்கள். ஆனால், வாரிசு நடிகரை 'ஸ்டார்' நடிகராக தமிழ் சினிமா ரசிகர்கள் வாரி அணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் விஜய் முதன்மையானவர். 'சட்டம் ஒரு இருட்டறை', 'நான் சிகப்பு மனிதன்', 'செந்தூரப்பூவே' என பல வெற்றிப் படங்களைத் தந்து, தமிழின் முன்னணி இயக்குநராக இருந்த எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், 28 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமல்ல. அதுவும், ஸ்டார் நடிகராக நீடிப்பது தமிழ் சினிமாவில் கவனத்துக்குரிய ஒன்று. தனது தனித்த திறமைகளாலேயே ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை வசப்படுத்தியவர்களில் விஜய் முக்கியமானவர்.
காதல் உணர்வுக்கு 'துள்ளாத மனமும் துள்ளும்', 'காதலுக்கு மரியாதை' முதலான படங்களைக் குறிப்பிடலாம் என்றால், காமெடிக்கும் நடனத்திற்கும் விஜய்யின் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைப்பது மட்டுமல்ல, ஸ்டார் நடிகர்களின் வேலை; சிரிக்க வைப்பதும்தான் என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். விஜய்யின் 'ஒன்ஸ்மோர்', 'நினைத்தேன் வந்தாய்', 'குஷி', 'ப்ரண்ட்ஸ்', 'பகவதி', 'கில்லி', 'சச்சின்', 'சிவகாசி', 'வில்லு', 'காவலன்', 'நண்பன்' என விஜய் ஒரு நல்ல என்டர்டெய்னர் என்பதற்கான பட்டியல் நீளமானது.
சினிமாவில் மட்டும் ப்ரொட்டாகனிஸ்டாக வெகுண்டெழாமல், நிஜத்திலும் சமூக அக்கறையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, 'பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஏழை மக்களைப் பாதிக்கிறது' என்று எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தவர். திரையில் எடுத்துக்கொண்டால், ஜி.எஸ்.டி சட்டத்தை 'மெர்சல்' படத்தின்மூலம் சீண்டியிருப்பார். அது, பாஜகவை போராட்டத்திக் குதிக்கவைத்ததும் பிரேக்கிங் நியூஸ் ஆனது.
இந்த அணுகுமுறையையும் விஜய் ரசிகர்கள் ரசித்தனர். 'ஜாமண்டரி பாக்ஸ் பிரசனைக்கெல்லாம் ஜட்ஜை கூப்பிடுற மாதிரி, எதிர்த்துப் பேசினாலே எல்லாத்துக்கும் ரெய்டு அனுப்பி பணியவைக்கும் பாஜகவை மெர்சலில் பஞ்சர் பண்ணிவிட்டார்' என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடியதும் இங்கே நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமல்ல, அதே ஆண்டில் நீட் எதிர்ப்புப் போராளி அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று நேரில் ஆறுதல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் திரைக்குத் திரும்புவோம். காதல், ஆக்ஷன் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக சமூக அக்கறை மிகுந்த படங்களிலும் நடித்து வருகிறார் விஜய். சமகால கல்விப் பிரச்னைகளை அவரது 'பைரவா' படம் பேசியிருக்கும். அதேபோல், பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் 'தெறி'யில் பதிவுசெய்யப்பட்டிருக்கும். இவ்வாறாக, கடந்த பத்தாண்டுகளில் விஜய் நடித்து வரும் படங்கள் பலவும் அரசியல், சமூக பிரச்னைகளையும், பெண்ணியக் கருத்துகளையும் கொண்டிருப்பதையும் கவனிக்கலாம்.
விஜய் சினிமாவுக்கு வந்து இந்த 28 ஆண்டுகளில், எல்லா ஆண்டுமே தவறாமல் அவரது திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. திரைப்படம் வெளிவராத ஒரே ஆண்டு என்றால், அது இந்த 2020-ஆம் ஆண்டுதான்.
ஆனால், எப்போதும் மாறாத அதே உற்சாகத்தோடு விஜய்யின் 28-வது சினிமா ஆண்டைக் கொண்டாடி வருகிறார்கள், அவரது ரசிகர்கள். விஜய் ரசிகர் மன்றங்களின் சார்பாக விதவித போஸ்டர்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
- வினி சர்பனா