சினிமா

'ஆசை" வெளியாகி 25 ஆண்டுகள்... படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா?

webteam

அஜித்குமார் திரைவாழ்வில் முதல் சூப்பர்ஹிட் படம் ஆசை. காதல் த்ரில்லராக இயக்குநர் வஸந்த் உருவாக்கிய ஆசை, அஜித்குமார், பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக மாறிவிட்டது. இன்று அந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதியதும் வஸந்த் முதலில் வைத்த பெயர் 'பூவெல்லாம் கேட்டுப்பார்'. அதற்கு அடுத்த வைத்த பெயர் 'கண்ணே'. பின்னர் 'ஆசை' என்ற தலைப்பு கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் பற்றியதாக அமைந்ததால் அப்படி பெயரிட்டுள்ளார்.

முதல்கட்ட படத்திற்கான விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த வில்லன் கதாபாத்திரம் வெளிப்படுத்தப்படவில்லை. ஏனெனில் அதுவொரு லவ் ஸ்டோரி என்பதால் தவிர்க்கப்பட்டது. அந்த வேடத்தில் முதலில் பேசப்பட்டவர் மனோஜ் கே. விஜயன். கே. பாலசந்தர்தான், பிரகாஷ்ராஜ் பெயரை பரிந்துரை செய்தார்.



அஜித்குமார் வேடத்தில் முதலில் சூர்யாவைத்தான் தேர்ந்தெடுத்தார் வஸந்த். அப்போது அவருக்கு நடிப்பதில் விருப்பமில்லாமல் இருந்தது. இயக்குநரிடம் ஆசை படத்தின் கதையைக் கேட்க முதலில் அஜித் பைக்கில் வந்தார். அவரை அடுத்த அரவிந்த் சாமியாகப் பார்த்ததாகவும் வஸந்த் தெரிவித்துள்ளார்.

அப்பாவி முகத்துடன் ஒரு கதாநாயகியை தேடிக்கொண்டிருந்த வஸந்த்துக்கு, சுவலெட்சுமியின் பெயரைச் சொன்னவர் யூகிசேது. சத்யஜித் ரேயின் மகன் சந்திப் ரே இயக்கிய உட்டாரன் என்ற வங்காளப் படத்தைப் பார்த்து பரிந்துரை செய்துள்ளார்.