2023ம் ஆண்டு முடிய இன்னும் ஒருசில தினங்களே மீதமிருக்கும் நிலையில், ஆண்டின் மொத்த நினைவுகள், நிகழ்வுகளையும் ஒருமுறை நினைவுபடுத்தும் விதமாக '2023 REWIND' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது புதியதலைமுறை. அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ஏமாற்றத்தைக் கொடுத்த சில முக்கியப்படங்களை பற்றி பேசும் முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு..
2023ம் ஆண்டில் வெளியான சில திரைப்படங்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தாமல், சைலண்ட்டாக வந்து சக்ஸஸும் ஆகியுள்ளது. அந்த வரிசையில், டாடா, குட் நைட், போர் தொழில் அவ்வளவு ஏன் சமீபத்தில் வெளியான ஜோ உள்ளிட்ட பல படங்களை இந்த வரிசையில் வைக்கலாம்.
மறுபக்கமோ, அடடே இந்த படத்தின் 2ம் பாகமா? இவரது இயக்கத்தில் உருவான படமா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சில திரைப்படங்கள் மண்ணைக்கவ்வி ஏமாற்றத்தை ஏற்படுத்தியதும் அரங்கேறியுள்ளது. அந்த வகையில், பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது என்னமோ சந்திரமுகி 2 திரைப்படம்தான்.
தமிழ் சினிமாவில் அதிரிபதிரி ஹிட் அடித்த ஒரு ஹாரர்ரர் திரில்லர் என்றால் அதுதான் சந்திரமுகி. என்னதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரமும் எழுதப்பட்டிருந்த விதத்தில் மெச்சப்பட்டது சந்திரமுகி. பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்த படத்தில் ஒவ்வொரு சீன்களும் பேசப்பட்டவைதான். ரஜினியின் எண்ட்ரியில் தொடங்கி, வடிவேலு காமெடிகள், பங்களாவுக்கு கொடுத்த பில்டப் என்று பயமும் பதற்றமுமாகவே அமைந்திருந்தது சந்திரமுகி. சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் 70 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அவ்வளவு ஏன் 800 நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் கொண்டாடப்பட்டது. பி.வாசுவியின் இயக்கமும் வித்யாசாகரின் இசையும் படத்தை அடுத்த கட்டத்திற்கே எடுத்துசென்றது. இந்த நிலையில்தான், 18 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வெளியிட்டார் பி.வாசு. படத்தின் டைட்டில்தான் 2ம் பாகம். ஆனால், முதல் பாகத்தின் கதை என்னவோ, அதேதான் 2ம் பாகத்தின் கதையும். நடிகர்கள் மற்றும் மாற்றப்பட்டிருந்தனர். அந்த அளவுக்குத்தான் படம் வந்திருந்தது என்று விமர்சனத்தை முன்வைக்கின்றனர் விமர்சகர்கள்.
ராகவாலாரன்ஸ், வடிவேலு, லக்ஷ்மி மேனன், கங்கனா ரனாவத், ராதிகா என்று திரைப்பட்டாளமே களம் கண்ட சந்திரமுகி -2 படத்தின் மீது எதிர்பார்ப்பு என்னவோ எக்கச்சக்கமாக இருந்தது. சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டிருந்தது. கீரவாணியின் இசை என்பதாலும் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. சரி, முதல்பாகத்தில்தான் வேட்டையனை சந்திரமுகி கொன்றுவிட்டாளே, இந்த முறை கதை என்னவாக இருக்கும் என்று தியேட்டருக்கு வந்தவர்களை, அரைத்த மாவையே அரைத்து ஏமாற்றத்தில் ஆழ்த்தியது படக்குழு. படத்தில் எழுத்து தொடங்கி கிராபிக்ஸ் வரை எதுவும் சரியாக இல்லை. ஏதோ ஒன்றிரண்டு சீன்கள் மட்டும் ஓகே என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர் ரசிகர்கள். 60 கோடி பட்ஜெட்டில் உருவான படம், அந்த பட்ஜெட்டைக் கூட தாண்டாத கலெக்சனையே எடுத்தது. கலெக்ஷன் இருக்கட்டும் கதையே சரியில்லையே என்றுதான் ரசிகர்கள் புலம்பித்தள்ளினர். ரசிகர்களின் தேர்வெல்லாம் சரிதான், கதையை மாற்றி இன்னும் சிறப்பாக எடுத்திருந்தால் படம் வேற லெவல் ஹிட் அடித்திருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது.
எல்.ஜி.எம் என்ற படத்தை இயக்குநருக்காகவோ அல்லது ஹரிஷ்கல்யாண், இவானாவுக்காகவோ பார்க்க வந்தவர்களைவிட, தோனிக்காக பார்க்க வந்தவர்கள்தான் அதிகம். ஆம், தோனி தயாரிப்பில் உருவான முதல் படம். அதுவும் தமிழில் படத்தை தயாரித்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் திரையரங்குகளுக்கு படை எடுத்தது மக்கள் கூட்டம். வருங்கால கணவனின் அம்மாவுடன் பழகிவிட்டு திருமணம் குறித்து முடிவெடுக்க நினைக்கும் பெண் என்று புதுமையான கதையை இயக்குநர் எடுத்திருந்தாலும், அதை சொன்ன விதத்தில் கோட்டை விட்டிருந்தார்.
முதல் பாதி கலகலப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதி எங்கு போகிறது என்றே தெரியாமல் போனது, படத்தை பார்க்க ஏன் போனோம் என்ற அளவுக்கு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு என்று அனைவரும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக நடித்திருந்தாலும் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி கோட்டை விட்டிருந்தார் என்று ஒருதரப்பு கூறியது. 8 கோடியில் உருவான படம் 9 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. நல்ல கதை, நல்ல தேர்வுதான் ஆனால் இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாம் என்ற விமர்சனங்கள் வந்தாலும், ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது எல்.ஜி.எம்
ஒரு படத்தை எத்தனை முறை டீவியில் போட்டாலும், அதை சளைக்காமல் மக்கள் பார்ப்பார்கள் என்று சில படங்கள் இருக்கும் அல்லவா.. அந்த லிஸ்ட்டைச் சேர்ந்தது பிச்சைக்காரன். அந்தப் படத்தின் 2ம் பாகம், ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல முடியும். 2016ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹுட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இந்த 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து, எடிட்டும் செய்திருந்தார்.
பணக்காரன் மூளைக்குள் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் மூளைக்குள் பணக்காரன், அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட், ஆண்டி பிகிலி என்ற சயின்ஸ் பிக்ஷன் ஸ்டோரி எல்லாம் ஓகேதான். ஆனால் கிராஃபிக்ஸில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற விமர்சனங்கள் வந்தாலும், முதல் பாகத்தில் வந்த கதைக்களம் மீண்டும் மீண்டும் வந்தது ரசிகர்களுக்கு அழற்சியை ஏற்படுத்தியது. மற்றபடி, விஜய் ஆண்டனியின் நடிப்பு மெச்சும்படியாகவே இருந்தது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் உருவான படம், 36 கோடியை வசூல் செய்திருந்தாலும், அருள் செல்வகுமாரின் பிச்சைக்காரன் கதைக்கான எதிர்ப்பார்ப்பை, விஜய் குருமூர்த்தி, சத்யா என்று இருவேறு பாத்திரத்தில் வந்த பிச்சைக்காரன் 2 பூர்த்திசெய்யவில்லை என்பதே நிதர்சனம்.
குக்கூ என்ற படத்தைக்கொடுத்த இயக்குநர் முதல்முறையாக கமர்சியல் பக்கம் திரும்பி இருக்கிறாரே.. கார்த்தியின் 25படம் வேறு என்றும், வித்தியாசமான உச்சரிப்புடன் வெளியான ட்ரைலரையும் நம்பி தீபாவளிக்கு வெளியான ஜப்பானை பார்க்க சென்றார்கள் பார்வையாளர்கள். படத்தின் ஃப்ரொமோஷன் என்னவோ அதன் உடன் வெளியான ஜிகர்தண்டா- 2 படத்தை தூக்கி சாப்பிடும்படியாகத்தான் இருந்தது.
ஆனால், கார்த்தியின் நடிப்பு, ஒன்லைன் காமெடிகளைத் தாண்டி திருடன் - போலீஸ் கதையில் எந்தவித பரபரப்பும் இல்லை. முழு அறுவைதான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, வெளியான அடுத்த 2 நாட்களிலேயே காலியாகின தியேட்டர்கள். சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் எதிர்மறை விமர்சனங்களால் பெரிதாக சோபிக்கவில்லை.
தமிழ் சினிமாவில் தனக்கென தனித்தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், விஜய்யின் படங்கள் கூட இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஏமாற்றத்தைத்தான் தந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான அஜித், விஜய் படங்கள் என்பதாலே பெரும் எதிர்பார்ப்பு கூடியது. வலிமைக்குப் பிறகு மீண்டும் ஹெச். வினோத் கூட்டணியில் அஜித் இணைந்திருந்ததால் எதிர்பார்ப்பு எங்கோ எகிறியது. ஆனால், முதல் படமான சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை கொடுத்திருந்த ஹெச்.வினோத்தின் டச், துணிவில் அவ்வளவாக தெரியவில்லையே என்றபடித்தான் துணிவு இருந்தது.
சுமார் 200 கோடியில் உருவான படம், 220 கோடி ரூபாயை வசூல் செய்தது. இருப்பினும் கிராபிக்ஸ் கோளாறுகள், ஃப்ளேபேக் ஒட்டாமல் போனது போன்றவை படத்தின் மைனசாக அமைந்தது. இந்த வரிசையில் 310 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படும் வாரிசு படமும் ஏமாற்றத்தையே தந்தது. பொங்கல் காலம் என்பதால் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்குச் சென்றாலும், விஜய்யின் நடிப்பு, இசையைத் தாண்டி படத்தின் புதிதாக கதைக்களம் எதுவும் இல்லை. குறிப்பாக மக்களுக்கு படம் கொஞ்சமும் கனெக்ட் ஆகவில்லை என்ற விமர்சனங்கள் மேலோங்கின.
தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டில் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாகவும், வசூலைக் கொடுத்த படமாகவும், கூடவே ஏமாற்றத்தையும் கொடுத்த படம் என்றால் அது லியோதான். பார்க்கும் இடமெல்லாம் லியோ லியோ என்று பேசப்பட்ட படமாக அமைந்தது இந்த படம். பெரிதாக ஃப்ரொமோஷனே இல்லாமல் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிய படமான இதில், கதைக்களத்தில் உறுதியாக இல்லாமல் இருந்ததும், ஃப்ளேஷ்பேக் கோளாறுகளும் மைனஸ் பாய்ண்ட்டாக மாறியது.
விஜய்யின் நடிப்பு சூப்பர், ஆனால் லோகேஷிடம் எதிர்பார்த்தது இது இல்லை என்றுதான் படத்தை பார்த்தவர்கள் விமர்சித்தனர். இவை மட்டுமல்லாது இறைவன், அகிலன், 80ஸ் பில்டப், கொலை என்று பல படங்கள் இந்த வருடம் பெரிதாக ஓடவில்லை எனினும், அவை மேல் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பும் இருந்திருக்கவில்லை. அதனால் அந்த ஏமாற்றத்தை பெரிதாக பார்க்கவும் முடியாது என்பதால் அவை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.