ஆண்டுதோறும் அதிக திரைப்படங்கள் ரிலீஸாகும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் மிகக் குறைந்தப் படங்களே ரிலீஸாகின. அதனால்தான் என்னவோ, வெளியான படங்களில் கவனம் ஈர்த்த பட்டியலை எளிதில் போட்டுவிடலாம். தொகுப்பு இதோ...
தர்பார்: வருடம்தோறும் பொங்கலுக்கு அஜித், விஜய் என ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகும். அதுவே, ’சூப்பர் ஸ்டார்’ படம் வெளியானால் எப்படி இருக்கும்? அப்படித்தான், கொண்டாடித் தீர்த்தனர் 2020 ஆம் ஆண்டினை ரஜினி ரசிகர்கள். பொங்கலையொட்டி வெளியானான ரஜினி, முருகதாஸ், நயன்தாரா மெகா கூட்டணியின் ’தர்பார்’ ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவனம் ஈர்த்தது. ஆனால், முழு திருப்தி கிடைத்தது என்பது சந்தேகமே.
போதை மாஃபியாக்களை கூண்டோடு அழிக்கும் சிட்டி கமிஷனர் வேடம் என்பதால் ரஜினி ரசிகர்களை இன்னும் ரசிக்க வைத்தார். துணை முதலமைச்சரின் மகள் உட்பட கடத்தப்பட்ட பெண்களை மீட்டாலும் மற்ற குழந்தைகளை மீட்டு போதை மாஃபியாக்களை பிடிக்கும்வரை, துணை முதலமைச்சரின் மகளை மீட்கவில்லை என்று அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆரம்பித்து, மகள்- தந்தை பாசம், நயனிடம் காதலைச் சொல்ல தடுமாறுவது, சண்டைக்காட்சிளில் தனக்கேயுரிய ஸ்டைலில் செம்ம 'தர்பார்' பண்ணியிருந்தார் ரஜினி. அவரது காஸ்டியூம் எல்லாமே 'மாஸ்'டியூமாக ரசிக்க வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கோ: ஓகே ஓகேவில் தொடங்கி உதியநிதி ஸ்டாலின் நடிப்பில் இதுவரை 10 படங்கள் வெளியாகி இருந்தாலும், அவற்றில் அவரது நடிப்பிற்காக கவனம் ஈர்த்த படம் படம் என்றால், அது மிஷ்கின் இயக்கத்தில் கடந்த ஜனவரியில் வெளியான ‘சைக்கோ’ படம்தான். சிறுவயதில் தன் இயல்பான செயலுக்கு ஆசிரியையால் வதைத்துத் துன்புறுத்தப்பட்டதன் பாதிப்பில், பிற்காலத்தில் அந்த ஆசிரியை கடத்தி சிறைவைத்துடன், திட்டமிட்டு பெண்களைக் கடத்திக் கொடுமைப்படுத்தும் கதாபாத்திரத்தில் சைக்கோவாக மிரட்டியிருந்தார் ராஜ்குமார் பிச்சுமணி. மற்றப் பெண்களைப் போலவே தனது காதலியையும் கடத்திச்செல்லும் அவரை கண்டுபிடிக்கும் பார்வையற்றவராக எதார்த்தமான நடிப்பில் ஈர்த்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
சைக்கோ என்றாலே தவறானவர்களாகவும் கெட்டவர்களாகவும் காட்டப்படும் சமூகத்தில், ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு ஏன் சைக்கோவாக அதுவும் பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோவாக ஏன் மாறினார்? அதன் பின்னணியில் இருக்கும் காரணங்களையும ஆராயவேண்டும் என்பதை காட்டி சைக்கோவாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணியின் மீது அன்பையும் பரிதாபத்தையும் வரவைத்திருப்பார் மிஷ்கின். பிசாசு என்றால் எப்படி பயம் வரும். ஆனால், மிஷ்கினின் பிசாசு நம்மை பயமுறுத்தவில்லை. பாசத்தை வரவைத்தது. அப்படித்தான் ரசிகர்களை சைக்கோ மீதும் மிஷ்கின் ஆத்திரப்படுத்த வைக்கவில்லை. அனுதாபத்தை உண்டாக்கினார்.
’ஓ மை கடவுளே’ - இந்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியாகி காதலர்களால் மட்டுமல்ல தம்பதிகளாலும் கொண்டாட்டப்பட்டு வசூல் செய்த படம் ’ஓ மை கடவுளே’. விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்கி ஆசம் சொல்ல வைத்தார் அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. சிறுவயது தோழன் அசோக் செல்வனை காதலிக்கும் ரித்திகா சிங், காதல் இல்லாமலேயே திருமணம் செய்துகொள்ளும் அசோக் செல்வன் இவர்களுக்குள்ளான மோதல், காதலே ’ஓ மை கடவுளே’ படத்தின் ஒன்லைன்.
செம்ம்ம்ம்ம்ம ஃப்ரெஷ்ஷான கதை என்பதாலும் ரசிக்க வைக்கும் காட்சிகளாலும் பாராட்டுக்களை குவித்து ‘வாவ் மை இயக்குநரே’ என்று கொண்டாட வைத்தார் அஸ்வத் மாரிமுத்து. திருமணமானவர்களின் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் இரண்டாவது வாய்ப்பு. 'சொன்னா புரியாது'. படம் பார்த்தால்தான் புரியும். அதனால், பார்க்காதவர்கள் இப்போதும் பார்த்து விடுங்கள். இப்படத்தை, தற்போது தெலுங்கிலும் பிஸியாக ரீமேக் செய்து வருகிறார் அஸ்வத் மாரிமுத்து.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்! - கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால் காதல் என்று அர்த்தம். ஆனால், காதலர்களே கொள்ளைடித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. ’ஆன்லைன்’ ஷாப்பிங்கில் எப்படியெல்லாம் கொள்ளை நடக்கலாம் என்று ஷாக் கொடுத்திருப்பது மட்டுமல்ல, ‘பெண்லைனில்’ ஆண்கள் ஏமாறுவது குறித்தும் வெளிச்சம்போட்டு காட்டி யூகிக்கமுடியாத டிவிஸ்ட்களால் நம் இதயத்தை கொள்ளையடித்திருந்தார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மான், ரக்ஷன், ரித்து வர்மா என தமிழில் அதிக படங்கள் நடிக்காதவர்களைக் கொண்டே எடுக்கப்பட்ட ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இந்த வருடத்தில் பிப்ரவரி கடைசியில் வெளியாகி ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தது. படம் பார்த்தவர்கள் அனைவருமே பாசிட்டிவ் விமர்சனங்களைக் கொடுக்க தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால், கொரோனா தடையாக வந்து தியேட்டர்களை மூட வைத்தாலும், தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் பல இடங்களில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மீண்டும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்பதே இப்படத்திற்கு கிடைத்த வெற்றி.
கன்னி மாடம்: கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ’கன்னிமாடம்' நடிகராக மட்டுமே அறியப்பட்ட போஸ் வெங்கட்டை இயக்குநராக ’பாஸ்’ வெங்கட் ஆக்கியது. ஸ்ரீராம், சாயதேவி, விஷ்ணு என அறிமுக நடிகர்களே நடித்திருந்தாலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தது. சாதி மாறி காதல் திருமணம் செய்துகொள்ளும் இளம் காதல் ஜோடியை துரத்தும் உறவினர்கள் என ஆணவக்கொலைக்கு எதிரான வன்முறைக் கதையே ’கன்னிமாடம்’.
தியேட்டரின் இருக்கையில் அமர்ந்திருந்து பார்ப்பது மறந்துபோய் நம் அக்கம் பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்ப்பது போலவே பதைபதைப்பூட்டும் காட்சிகளால் ஆணவப் படுகொலையை ஆவணப்படுத்தியிருந்தார், இப்படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட். அதேநேரத்தில், சாதி வெறியால் பெற்றோர்கள் ஆணவக்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டு வேறுவழியில்லாமல், காதலர்கள் சுயமாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டால் முதலில் பாதுகாப்பான நபரை நாடிச்செல்லவேண்டும். சுயமாக சம்பாதிக்கும் திறனைப் பெற்றிருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கையும் ஊட்டியது ’கன்னிமாடம்’.
பொன்மகள் வந்தாள்: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் ஓடிடியில் வெளியானது ‘பொன் மகள் வந்தாள்’. ஓடிடியில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமை இப்படத்திற்கே உண்டு. பாலியல் கொடூரன்களால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து தன்னை காப்பாற்றிய தாயின் களங்கத்தைப் போக்க போராடும் மகளாக… நீதியின் தேவதையாக ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக் இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
’பெண் எப்படி பழகவேண்டும்; என்ன உடை அணியவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதற்கு பதில் ஆண் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்’ என்று அழுத்தமாக கூறிய ஜோதிகா, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபா, ஹாசினி, நந்தினி என பாதிக்கப்பட்ட பெண்களையும் படத்தில் சேர்த்த இயக்குநர் ஃப்ரெட்ரிக், அவரின் புதிய முயற்சிக்கு தோள்கொடுத்து தயாரித்து விழிப்புணர்வூட்டிய சூர்யா மூவருமே பாலியல் கொடூரன்களுக்கு எதிரான சமூக அக்கறையை வெளிப்படுத்தினர். ’தேவதைகள் ஆண்களாகவும் வரலாம்’ என்பதாகட்டும்; ’ஒருவருடைய வலியை உணர இரத்த சொந்தமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை’ என்ற வசனங்கள் மூலம், இப்படத்தின் வசனகர்த்தா லஷ்மி சரவணக்குமாரும் கவனிக்கவைத்தார்.
சூரரைப் போற்று: கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியான படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இல்லாததால், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்தபோது முந்தைய அனுபவமே கிடைத்துவிடுமோ என்று சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல சூர்யா ரசிகர்களுக்கும் ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அத்தனை பயத்தையும் சூர்யாவின் பாய்ச்சலான நடிப்பில் வெளியான சூரரைப் போற்று போக்கியதோடு ஓடிடியில் வெளியாகும் படங்களும் வெற்றி பெறும், ரசிகர்களை கொண்டாட வைக்கும் என்ற நம்பிக்கையை அளித்த முதல் தமிழ் படம் சூரரைப் போற்று.
கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் சுயசரிதையின் ஒரு பகுதியை எடுத்து வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை பாடத்தை எடுத்தார் இயக்குநர் சுதா கொங்கரா. 2020 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் சூரரைப் போற்றுதான் சூப்பர் டூப்பர் ஹிட் படம் என்று சினிமா விமர்சகர்கள் இப்போதுவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்களிலும் வெளியிட கோரிக்கை வைத்து வருகிறார்கள். சூர்யா கொடுத்த தன்னம்பிக்கையே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றன.
சாதாரண மனிதன் எப்படி விமான நிறுவனத்தை ஆரம்பிக்கிறான் என்பது கதைக்களமாக இருந்தாலும் ’உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு. ப்ளைனு. அதேமாதிரி, எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. (பேக்கிரி) மொத கல்யாணத்துல ஏதாவது சாதிக்கமுடியுதா பார்ப்போம் என்று தங்களுக்கான லட்சியத்தையும் விட்டுக்கொடுக்காமல் சூர்யாவையும் அபர்னாவையும் சாதிக்க வைத்து பெண்களின் சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்று பெண்ணிய சிந்தனையோடும் அக்கறையோடும் காட்டிய சுதா கொங்கராவுக்கு, இப்போது பெண் ரசிகைகளும் அதிகரித்துவிட்டார்கள். நடிப்பில் ஓடுதளத்திலிருந்து படு ஸ்பீடாக பறக்கும் விமானம்போல் சூர்யா நம் இதயதளத்தில் டேக் ஆஃப் ஆகி பறந்துகொண்டே இப்போதும் பறந்துகொண்டே இருக்கிறார். அபர்ணா முரளியின் அடிப்பு அபாரம் சொல்ல வைத்தது. ’வானம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா’... ‘உறியடி’ விஜயக்குமாரின் வசனங்கள் படத்தை கீழிறங்காமல் கேப்டனாக இருந்து விண்ணில் பறக்க வைத்தது.
மூக்குத்தி அம்மன்: இந்த வருடம் பொன் மகள் வந்தாள், பெண் குயின், மூக்குத்தி அம்மன் என நாயகிகளை மையப்படுத்தி வெளிவந்த படங்களில் முக்கிய படமாக ரசிகர்களை கொண்டாட வைத்தது ஆர்.ஜே பாலாஜி இயக்கிய ’மூக்குத்தி அம்மன்’. சாமி பெயரால் மக்களுக்கு காதுகுத்தும் சாமியார்களுக்கு எதிராக வேல் எடுத்து குத்துகின்ற மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிப்பில் கெத்து காட்டியிருந்தார். கார்ப்பரேட் சாமியார்கள் எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டி பல்லாயிரக்கணக்கான காடுகளை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள் என்பதை கதைக்களமாக அமைத்து கவனம் ஈர்த்தார் ஆர்.ஜே பாலாஜி. ஆண் இயக்குநராக இருந்தாலும் அக்கறையோடு பெண்கள் படும் துயரங்களை சிரிப்போடும் சிந்திக்க வைத்தும் அமைத்திருந்ததால் பெண்கள் மட்டுமல்ல முற்போக்கு சிந்தனையாளர்களும் மூக்குத்தி அம்மனை ஏற்றுக்கொண்டார்கள். நயன்தாரா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கடவுள், பக்தி என்கிற பெயர்களால் ஏமாற்றும் முகமூடிகளை கிழித்து, மூடி கிடக்கும் கண்களை திறந்தது.
- வினி சர்பனா