சினிமா

எண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள்

webteam

80களில் நடிக்க தொடங்கிய நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் ஒரு தேதியை தேர்வு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த வருடத்திற்கான சந்திப்பு கடந்த 10 ஆம் தேதி சென்னை தி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றுள்ளது. இதில், சரத்குமார், பாக்யராஜ், மோகன்லால், ரஹ்மான், சத்யராஜ், ஜெயராம், அர்ஜூன்,சுமன், அம்பிகா, ராதா, குஷ்பு, சுஹாசினி, ஷோபனா, நதியா உள்ளிட்ட 22 நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சந்திப்பின்போது ஐடியா ஒன்று உருவாக்கப்படும். அதற்கு ஏற்றார்போல் நடிகர், நடிகைகள் ஆடை அணிகலன் அணிந்து வருவர். இந்த ஆண்டு டெனிம் மற்றும் டைமண்ட்ஸ் எனத் தேர்வு செய்து உடைகளை அணிந்து வந்தனர். 

மேலும் டெனிம் ஆடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன. 12 நடிகர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத்தொடங்கினர். அப்போது, அனைவரும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும், வெள்ளை நிற டெனிம் சர்ட்டுகளும் அணிந்து வந்தனர். சில நடிகைகள் டெனிம் துணியால் ஆன ஜாக்கெட்டுகளும் அணிந்து வந்தனர். 

மோகன்லால் வெள்ளை நிற சட்டையின் பின்புறம் 80 என அச்சிடப்பட்டிருந்தது. மும்பையில் இருந்து வந்த் பூனம் தில்லான் அனைத்து நட்சத்திரங்களுக்கும் அவரவர் புகைப்படத்துடன் கூடிய செல்போன் கவர் பரிசு பொருளாக வாங்கி வந்திருந்தார். 

இதையடுத்து ஒவ்வொருவரும் கலைநிகழ்ச்சிகள் மூலம் தங்களை மகிழ்வித்து கொண்டனர். ஜெயராம், சத்யராஜ், நரேஷ் ஆகியோர் சிவாஜிகணேசன்,  எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களை போன்று நடித்து காண்பித்தனர். 

மேலும் ஜெயராம் கமல்ஹாசனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘விஸ்வரூபம்’ படத்தில் இருந்து சில காட்சிகளை தத்ரூபமாக நடித்து காண்பித்தார். ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு பாடலுக்கு நடிகைகள் நடனமாடி காண்பித்தனர். பின்னர் 
நள்ளிரவில கேக் வெட்டி கொண்டாட்டத்தை முடித்து வைத்தனர். மீண்டும் இவர்களின் 10 வது ரீ யூனியன் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.