சினிமா

'காசி! நீயுமாடா?'.. துரோகத்தின் காவியம்.. “சுப்ரமணியபுரம்” வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு!

'காசி! நீயுமாடா?'.. துரோகத்தின் காவியம்.. “சுப்ரமணியபுரம்” வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு!

சங்கீதா

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்றளவு மட்டுமில்லை, காலத்துக்கும் பேசும் படமாக அமைந்ததுதான் ‘சுப்ரமணியபுரம்’. இந்தப் படம் வெளியாகி 14 வருடங்களை இன்றுடன் நிறைவு செய்துள்ளது.

தமிழ் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், கதையும், திரைக்கதையும் நன்றாக இருந்தால் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதே இல்லை. அப்படி எதிர்பார்க்காமல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்றளவு மட்டுமில்லை, காலத்துக்கும் பேசும் படமாக அமைந்ததுதான் ‘சுப்ரமணியபுரம்’. இந்தப் படம் வெளியாகி 14 வருடங்களை இன்றுடன் நிறைவு செய்துள்ளது.

80-களின் காலக்கட்டத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்தியப் படம் ‘சுப்ரமணியபுரம்’ என்றால் மிகையாகாது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையுமே செதுக்கியிருப்பார் அறிமுக இயக்குநரும், பாலா, அமீரின் சிஷ்யருமான சசிகுமார். மதுரை என்ற ஊரை ரசிகர்கள் தங்களது மனதுடன் கனெக்ட் செய்யும் வகையில், கதாநாயகனுக்கு அழகர் என்று பெயர் வைத்து கதையோடும், தென் மாவட்டங்களின் சொந்த பந்தங்களோடும் நம்மை ஒன்றிணைய வைத்திருப்பார் சசிகுமார்.

எதிரிகளை கூட மன்னித்து விடலாம், நம் கூடவே இருந்து நமக்கு துரோகம் செய்யும் துரோகிகளை விட்டுவிடவே கூடாது என்பது காலம் காலமாக சொல்லப்படும் விஷயம். ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை துரோகம் கொடுமையான மரண வேதனையை விட அதிகமானது. இதனை மிகவும் தனது உணர்ச்சிகள் மூலம், கிளைமேக்சில் சசிகுமார் தனது உணர்வுகளால் வெளிப்படுத்தியிருப்பார். கஞ்சா கருப்பை பார்த்து காசி! நீயுமாடா? என்று அவர் கேட்பது போன்ற அவரது முகபாவனை நம்மை கலங்க வைக்கும். கிட்டத்தட்ட அவரது உடல் மட்டுமே அங்கே இருக்கும். துரோகத்தால் அவரது உயிர் பிரிந்தது போன்று மிக அழகாக அக்காட்சி காட்டப்பட்டிருக்கும்.

இதேபோல், சுவாதியை பாசத்தால் சமுத்திரகனி அழைத்து வந்து, அதே பாசமும் காதலும் நிறைந்த கதாநாயகன் ஜெய்யை கொலை செய்வது துரோகத்தின் உச்சமாக இருக்கும். காதல், நண்பன், பழகியவர் துரோகம் செய்தால் அந்த வேதனை மிகப்பொருத்தமாக காட்டப்பட்டிருக்கும். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம் என்றால், துரோகத்தால் வீழ்த்தியவனுக்கும் துரோகம் தான் பரிசு தான் என்றே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

உடையிலும், லொக்கேஷனிலும், பேச்சிலும், நடையிலும் என ஒவ்வொன்றாக செதுக்கியிருப்பார் சசிகுமார். இவ்ளோ நேரமா பூட்டியிருந்த வீட்ல தான் சவுண்ட குடுத்தோமோ, நாங்களும் செவப்பாதானேடா இருக்கோம், சுத்த பத்தமாதான இருக்க, சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா போன்ற வசனங்கள் மறக்கவே முடியாது. தொலைக்காட்சி தொகுப்பாளராகவே அதுவரை அறியப்பட்ட ஜேம்ஸ் வசந்தன், தனது முன்னாள் பள்ளி மாணவன் சசிகுமாரின் படமான ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

சொல்லி அடித்த மாதிரி பாடல்கள் ஒன்றும் ஒவ்வொரு ரகம். “கண்கள் இரண்டால்” என்ற மென்மையான காதல் பாடல் இளைஞர்களை சுண்டியிழுத்தது என்றால், ஊர் திருவிழாக்களை அதிரவிடும் “மதுர குலுங்க குலுங்க” பாடல் வேற லெவல் ரகம். சமுத்திரகனியை இன்று வேறொரு தளத்திற்கு நடிகராக கொண்டு சென்றப் படம் ‘சுப்ரமணியபுரம்’. வன்முறை அதிகமாக இருந்ததாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், ரசிகர்களை கவர்ந்து இழுக்கவே செய்தது ‘சுப்ரமணியபுரம்’.

இந்தப் படத்தைப்போல் எப்போது அடுத்தப் படம் கொடுப்பார் என்று நம்மை ஏங்க வைத்த இயக்குநர் சசிகுமார், இன்று 14 வருட நிறைவை முன்னிட்டு தனது சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜூலை 4 எப்போதும் எனக்கு சிறப்பான நாள். ஏனெனில் 14 வருடங்களுக்கு முன்னதாக ‘சுப்ரமணியபுரம்’ படம் இந்த நாளில் தான் வெளியானது. இன்றளவும் மக்கள் இந்தப் படத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பது எனக்கு பெருமை. விரைவில் இயக்குநராக எனது அடுத்தப்படம் குறித்த தகவல் வெளிவரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சில திரைப்படங்கள் தான் காதாபாத்திரங்களுடன், அந்தக் கதையுடன் நம்மை ஒன்ற வைத்துவிடும். படம் முடிந்து சில நாட்கள் வரையில் அந்த கதை ஏற்படுத்திய தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான ஒரு ரத்தமும் சதையுமான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். 2007ம் ஆண்டு பருத்தி வீரன் திரைப்படம் ஒரு ரவுண்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டே அதேபோன்ற ஒரு தாக்கத்தை சுப்ரமணியபுரம் படம் ஏற்படுத்தியது.