தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்தப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கங்கனா ரனாவத்தின் பிறந்த நாளான நாளை ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து ஏ.என்.ஐ நிறுவனத்தினடம் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், “கோடிக்கணக்கான மக்களுக்கு முன் மாதிரியாக இருந்த ஒரு லெஜெண்டின் வாழ்கையை தலைவி திரைப்படம் பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட லெஜெண்டின் அந்தஸ்துக்கான உரிய நீதியை வழங்குவது எங்களின் அடிப்படை கடமை. ஜெயலலிதா தமிழக மக்களுக்கு மட்டும் அடையாளமாக இல்லாமல் நாடும் முழுவதும் புகழ்பெற்ற ஆளுமையாக உள்ளார்.
ஆதலால்தான் ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லரை மிகப்பெரிய அளவில் மும்பை மற்றும் சென்னையில் வெளியிடுகிறோம். தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரம் கேட்ட, துல்லியமான மேனரிசங்களை கங்கனா வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.
இது குறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும் போது, “ தலைவி ட்ரெய்லர் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ளது. தலைவி உருவாகி கொண்டிருந்த போது, ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்காக 20 கிலோ எடை கூடி, அடுத்த சில மாதங்களில் எடை குறைத்தது மட்டும் எனக்கு சவாலாக இல்லை. இன்னும் சில மணி நேரங்களில் ஜெயா உங்களுடையவள் ஆகி விடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.