சினிமா

சர்ச்சைகளை தாண்டி ‘எஸ்.துர்கா’ ஏப்ரல் 6 ரிலீஸ்

சர்ச்சைகளை தாண்டி ‘எஸ்.துர்கா’ ஏப்ரல் 6 ரிலீஸ்

webteam

பல தடைகளைத் தாண்டி மலையாளப் படம் ‘எஸ்.துர்கா’ ஏப்ரல் 6ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது. 

மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன். இவர் இயக்கிய திரைப்படம்தான் ‘எஸ்.துர்கா’. இதற்கு ஆரம்பத்தில் ‘செக்ஸ் துர்கா’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. 48வது சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட முயன்ற போது சர்ச்சை எழுந்தது. இந்தப் படத்தை திரைப்பட நடுவர் குழு தேர்வு செய்திருந்தும் அதனை வெளியிடக்கூடாது என தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனால் கோபமடைந்த நடுவர் குழுவில் இருந்த பலர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். 

இந்தப் பிரச்னையை தொடர்ந்து இயக்குநர் சனல் குமார்  சசிதரன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தணிக்கை செய்யப்பட்ட படப்பிரதியை நீதிபதிகள் குழு பார்வையிட்டது. அதன் பிறகு நீதிபதிகள் திரைப்பட விழா கமிட்டிக்கு படத்தை திரையிடுமாறு உத்தரவிட்டது. மீண்டும் படத்தின் தலைப்பைக் காட்டி பிரச்னை எழுந்தது. இந்தப் போராட்டத்தில் மனம் நொந்துப்போன இயக்குநர் சனல் குமார் சசிதரன், “நான் ஒருதுளிக்கூட சந்தோஷமாக இல்லை.” என தனது முகநூலில் ஒரு பதிவை போட்டார். வகுப்புவாத அமைப்புக்கள் ஒரு படைப்பின் மீது எந்தளவுக்கு தங்களின் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர் என அவர் வருந்தி பேசினார். உலக அளவில் நடைபெற்ற பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு படம் இந்தியாவில் முடக்கப்பட்டதை எதிர்த்து பலரும் குரல் எழுப்பினர்.இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.