சினிமா

பத்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘ரோமா’ அப்டேட்ஸ்

webteam

நெட்ஃபிலிக்ஸில் வெளியிடப்பட்டுள்ள ‘ரோமா’ திரைப்படம் 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

2018ல் வெளியான ‘ரோமா’ திரைப்படத்தை அல்ஃபோன்ஸோ குரோன் என்பவர் எழுதி இயக்கி இருந்தார். முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் உருவான திரைப்படம் இது. இந்தத் திரைப்படம் 91வது ஆண்டு ஆஸ்கர் 2019 விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிக்ஸில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் வரலாற்றில் முதன்முறையாக சிறந்த படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இப்படம் முற்றிலும் ஸ்பானிஷ் - மெக்சிகோ மொழி கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் தனிச்சையாக ஆங்கிலத்தில் இயங்கும் வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 1970களில் மெக்ஸிகோ நகரம் எவ்வாறு இருந்தது என்பதை முழுதாக திரையில் கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே இந்த வரலாற்று பின்புலத்தை திரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் வரும் குறிப்பிட்ட ஒரு வீட்டின் காட்சி படத்தின் இயக்குநர் அல்ஃபோன்ஸோவின் பால்யகால வீட்டை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படம் ஏறக்குறைய பத்து தரவரிசைகளின் கீழ் பரிந்திரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனருக்கான பிரிவு, சிறந்த முன்னணி கதாப்பாத்திர நடிகை,சிறந்த வடிவமைப்பு, சிறந்த ஒலி அமைப்பு,சிறந்த துணை நடிகை, சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்,சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த ஒலி கலவை என பட்டியல் பெரிதாகி உள்ளது. இயக்குநர் அல்ஃபோன்ஸோ குரோன் இதுவரை 10 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

எப்படி இந்தப் படத்தை பார்ப்பது?

உங்கள் மொபைல் போனில் எந்த இடையூறுமின்றி நெட்ஃபிலிக்ஸில் ‘ரோமா’ படத்தை கண்டுகளிக்கலாம். இதன் மிகச்சிறப்பான ஒலி வடிவமைப்புடன் படத்தின் முழு தாக்கத்தையும், நீங்கள் குட்டித்திரையில் அனுபவிக்கலாம்.