தனுஷின் ’ரவுடி பேபி’ பாடலுக்குப் பாராட்டுத் தெரிவித்த நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ரம்யாவை, கன்னட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம், ’மாரி’. தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ’மாரி 2’ என்ற பெயரில் இப்போது உருவானது. பாலாஜி மோகன் இயக்கியிருந்தார்.
தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ என்ற பாடல் ஹிட் ஆனது. யூடியூப்பில் இந்த பாடலை 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதை நடிகர் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகையும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாவும் இதை பாராட்டியிருந்தார். தனுஷையும் யுவன் சங்கர் ராஜாவையும் குறிப்பிட்டு, இரண்டு ரவுடிகளுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார். இவர் தனுஷூடன் ’பொல்லாதவன்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பாராட்டுக்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் கன்னட ரசிகர்கள் பலர் ரம்யாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அதில், ‘’உங்கள் தமிழ்ப் பாசத்துக்கு நன்றி. கன்னடத்தில் எத்தனையோ படங்கள் வெளியாகியுள்ளன. அதை பாராட்டியுள்ளீர்களா?’’ என்று சிலர் கேட்டுள்ளனர்.
‘நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எப். படம் உங்கள் பாகிஸ்தானிலும் வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றியும் பேசலாமே’’ என்றும் ’’ரூ.250 கோடி வசூலித்துள்ள முதல் கன்னட படம் ’கே.ஜி.எப்’. அதை பற்றி ஏன் ஏதும் பேசவில்லை’’ என்றும் சிலர் கேட்டுள்ளனர். சிலர், ‘’அடுத்த முறை தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். கர்நாடகாவில் உங்களுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. கன்னட பாடலையோ, படத்தையோ நீங்கள் பாராட்டிப் பார்த்ததில்லை. உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளனர்.