சினிமா

"தியேட்டரில் ஒளிந்துகொண்டு என் படங்களைப் பார்ப்பேன்" - நடிகர் பிரேம்ஜி

webteam

ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் அக்டோபர் 15 முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும் என்பது புதிராக இருந்துவருகிறது. இந்த நிலையில், தியேட்டருக்குச் சென்று படம் பார்த்த அனுபவங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பிரபலங்கள் பலரும் பகிர்ந்துவருகின்றனர். நடிகர் பிரேம்ஜியின் அனுபவம் எப்படி என்று பார்க்கலாம்...

"எனக்கு பத்து வயது இருக்கும்போது படம் பார்க்கத் தொடங்கிவிட்டேன். எல்லாமே பெரியப்பா (இளையராஜா) இசையமைத்த படங்கள். பிரிவியூ தியேட்டருக்குச் சென்று பார்த்துவருவோம். முதல் வரிசையில் நானும் யுவனும் உட்கார்ந்திருப்போம். சூப்பர்ஸ்டார், உலக நாயகன், பிரபு, சத்யராஜ், கார்த்திக், ராமராஜன் சார் படங்களை குடும்பத்துடன் சென்று பார்த்திருக்கிறோம். அந்தப் படங்களுக்கு பெரியப்பாதான் இசை. மூன்று நாட்களுக்கு முன்பே புதுப் படங்களைப் பார்த்துவிடுவோம்.

ஒரு படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் வேடிக்கையானது. அந்தப் படம் அபிஸ், ஜேம்ஸ் கேமரூன் இயக்கியது. அண்ணன் பிரபு வெங்கட் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தேவி தியேட்டரில் பார்த்த ஞாபகம். அதுவொரு புதிய அனுபவம். கதையில் பெரும் பகுதி நீருக்குள் நடக்கும். படம் பார்க்கும்போது அடிக்கடி மின்சாரம் போய்விட்டது. பார்வையாளர்கள் ஜாலியாக கத்தினார்கள். அதுவே வேறு லெவல்ல இருந்தது. அந்த காட்சி ஹவுஸ்புல். கூட்டத்துடன் சேர்ந்து நானும் கத்தினேன்.

சென்னை 600028 படம் வெளியானபோது, அந்தப் படத்தைப் பார்க்க பல தியேட்டர்களுக்குச் சென்றோம். எங்கே கைதட்டுகிறார்கள், எதை சலிப்பாக நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்காகச் சென்றிருந்தோம். இதேபோல சரோஜா, மங்காத்தா போன்ற மற்ற படங்களுக்கும் சென்றோம். என் அண்ணன் இயக்கிய படங்களில் என் நடிப்பை ரசிகர்கள் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறியும் ஆவலுடன் தியேட்டர்களுக்குச் செல்வேன். ஒளிந்துகொண்டுதான் பார்ப்பேன்" என்று உற்சாகமான தியேட்டர் அனுபவங்களைப் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார் பிரேம்ஜி.