சினிமா

"எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன்" - இயக்குநர் ராதாமோகனின் தியேட்டர் அனுபவம்

"எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன்" - இயக்குநர் ராதாமோகனின் தியேட்டர் அனுபவம்

webteam

தியேட்டர்களின் கதவுகள் திறக்கப்படுமா என சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று தியேட்டரில் பார்த்த படங்கள் மறக்கமுடியாத நினைவுகளில் இருக்கின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பசுமையான தியேட்டர் அனுபவங்களை சுவையாக விவரித்துள்ளார் இயக்குநர் ராதாமோகன்...

"முதல் நாள் முதல் ஷோவைப் பார்ப்பதில் எனக்கு அதிக விருப்பம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து படங்கள் பார்ப்போம். ஒரே நாளில் பல ஷோக்கள் ஒரு படத்தைப் பார்த்தோம். இன்றுள்ள நிலைக்கு அந்தப் படங்கள்தான் காரணம். வேறு துறையில் நான் இருந்திருந்தாலும், தீவிர சினிமா ரசிகராகவே இருந்திருப்பேன். இந்த ஊரடங்கு நாட்களில் தியேட்டர் அனுபவங்களை இழந்துவிட்டேன்.

டூரிங் டாக்கிஸ் உள்பட பல வகையான தியேட்டர்களில் படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செங்கல்பட்டு அருகே சென்றிருந்தோம். அப்போது ஒரு கிராமத்தில் இருந்த டென்ட் கொட்டகையில் எம்ஜிஆரின் புதிய பூமி பார்த்தது நினைவில் இருக்கிறது. எப்போது எம்ஜிஆர் திரையில் தோன்றினாலும் ரசிகர்கள் செய்த பெரும் ஆர்ப்பரிப்பு அடிக்கடி என் ஞாபகத்தில் வந்துபோகும்.

அலங்கார் தியேட்டரில் மை டியர் குட்டிச்சாத்தான் 3டி படத்தை நண்பர்களுடன் பார்த்து ரசித்தோம். அந்த தியேட்டரின் சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனந்த் தியேட்டரில் என்டர் தி டிராகன், சத்யத்தில் ஷோலே படம் என எத்தனையோ அனுபவங்கள். அந்த நாட்களில் நான் எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். குடும்பத்துடன் படங்களுக்குச் செல்வேன். சிவாஜி கணேசன் படங்களையும் ரசித்துப் பார்ப்பேன்.

கல்லூரி நாட்களில் வாரந்தோறும் ஒரு படத்தைப் பார்த்துவிடுவோம். லயோலா கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட நாளில் மூன்று வகுப்புகள் மட்டுமே நடக்கும். அப்போதெல்லாம் லியோ, மிட்லேண்ட் தியேட்டர்களுக்குச் சென்றுவிடுவோம். இயக்குநராக உருவான பிறகு, என் படங்களின் சுவாரசியமான காட்சிகளைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவம். மக்களுடன் தியேட்டரில் இருக்கும்போது, கதாபாத்திரங்களுடன் சேர்ந்து அழுவதும் சிரிப்பதும் ஒரு மேஜிக்" என்று ராதாமோகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.