தமிழகத்தில் பலமுறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழ் சினிமா பணிகள் முடங்கிப்போயுள்ளன. தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. பல கோடி ரூபாய் புழங்கும் திரையுலகம் திணறிவருகிறது. இந்த நிலையில், நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவீதம் விட்டுக்கொடுக்கவேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்திவைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்கவேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்கள் மனது வைக்கவேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின்மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், " தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்த கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கெனவே சில நடிகர்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள்கொடுக்கவேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?" என்றும் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
"ரூபாய் பத்து இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்திவைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள்வைக்கிறேன்" என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் பாரதிராஜா.