கடல்சார் வணிகத்தை கைப்பற்ற நடக்கும் சண்டைகளும், சூழ்ச்சிகளுமே 'அகிலன்’ பட ஒன்லைன் கதையாக நம்மை ஆக்கிரமிக்கிறது.
கடல் வழி நடக்கும் வியாபாரங்களுக்கு இடையில் போதைப் பொருள், கருப்புப் பணம், ஆள் கடத்தல் என சட்டத்துக்குப் புறம்பாக சகலமும் நடக்கிறது. இவற்றுக்கு எல்லாம் மாஸ்டர் மைண்ட், கபூர் (தருண் அரோரா). அவரது கட்டளைகளை நிறைவேற்றும் வேலையை செய்பவர் பரந்தாமன் (ஹரீஷ் பெரேடி). தனக்கு வரும் சிக்கலான வேலைகளை முடிக்க பரந்தாமன் அழைக்கும் ஆள் தான் அகிலன் (ஜெயம் ரவி). ஒருபக்கம் உலகம் முழுக்க இருந்து வரும் கடத்தல் வேலைகளை தனது ஆட்கள் மூலம் செய்து கொடுக்கிறார் கபூர். இன்னொரு பக்கம் கடல்வழியாக நடக்கும் இந்த கடத்தல்களை தடுத்து, கபூரை பிடிக்க நினைக்கிறார் காவலதிகாரி கோகுல் (சிரக் ஜானி). இவர்களை எல்லாம் தாண்டி கடல் வணிகத்தைக் கைப்பற்றி கிங் ஆஃப் ஓஷன் ஆக நினைக்கிறார் அகிலன். அது ஏன்? எப்படி? இதற்காக அவர் சந்திக்கும் சவால்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.
பூலோகம் படத்தில் குத்துச்சண்டை மூலம், விளம்பர உலகின் சுரண்டலை பற்றி பேசிய கல்யாண் கிருஷ்ணன், அகிலன் மூலம் கடல் வழி நடக்கும் வியாபாரத்தையும், அதன் கூடவே நடக்கும் கடத்தல்கள் பற்றியும் பேசியிருக்கிறார். ஜெயம் ரவி வழக்கம் போல் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை நிறைவாக செய்திருக்கிறார். தனக்கு வேலை சொல்லும் முதலாலியிடம் பணிவு காட்டிக் கொண்டே, அவரை மிரட்டும் படி பேசுவது, கடத்தலுக்கு போடும் ஸ்கெட்ச் என திரையில் முடிந்தவரை சுவாரஸ்யம் காட்டுகிறார். விசுவாசம், குற்றவுணர்ச்சி, துரோகம் என்பதெல்லாம் நம்மை அடிமையாக வைத்திருக்க முதலாளிகள் உருவாக்கியது என்று படத்தில் வரும் ஒரு சில வசனங்களும் கவனிக்க வைக்கிறது. விஜய் முருகனுடைய கலை இயக்கம் படத்தின் பல காட்சிகளை பார்வையாளர்கள் நம்பும்படி காட்டுகிறது. ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் எல்லா காட்சிகளையும் ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறார்.
இவை தவிர படத்தில் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எந்த விஷயமும் இல்லை. நடிகர்களாக எடுத்துக் கொண்டால் தருண் அரோரா, சிரக் ஜானி, ஹரீஷ் பெரேடி, ஓ ஏ கே சுந்தர், ஹரீஷ் உத்தமன், மதுசூதனன் ராவ், மைம் கோபி, வத்திக்குச்சு திலீபன், சாய் தீனா என அனைவரும் அவர்களின் டெம்ப்ளேட் நடிப்பு என்னவோ அதை மீண்டும் ஒரு முறை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்கள். நாயகியாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே பிரியா பவானி ஷங்கரை நடிக்க வைத்திருப்பதாக தோன்றுகிறது. அந்த கதாபாத்திரத்தால் படத்தில் எந்த விஷயமும் நடக்கவில்லை. மேலும் எரிச்சலூட்டும் ஒரு ரொமான்ஸ் காட்சி இன்னும் சோர்வு தருகிறது.
இங்கு சட்டவிரோதமாக பல குற்றங்கள் எளிமையாக நடந்துவிடுகிறது, ஆனால் சட்டப்படி நடக்க வேண்டிய அத்தியாவசிய விஷயங்களை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல் உள்ளது என கல்யாண் கிருஷ்ணன் பேச நினைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அதை சொன்ன விதம் மிக சோர்வளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. படத்தின் முதல் பாதியிலாவது, ஹார்பர் பகுதியில் நடக்கும் விஷயங்கள் என்ன என்று விரிவாகக் காட்டிக் கொண்டே செல்லும் திரைக்கதை, ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கதாநாயகன் ஏன் இப்படி செய்கிறார் என்று சொல்லும் ஒரு ஃப்ளாஷ்பேக். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என எதிலும் ஒரு அழுத்தமே இல்லை. எப்போதும் கொஞ்சம் சுமார் ரக படத்தைக் கூட தனது பின்னணி இசையால் காப்பாற்றும் சாம் சி எஸ் கூட, அகிலனை கைவிட்டிருக்கிறார். படத்தின் பாடலோ, பின்னணி இசையோ சற்றும் ரசிக்கும்படி இல்லை.
மொத்தத்தில் ஒரு ஆவரேஜான முதல் பாதி, பிலோ ஆவரேஜான இரண்டாம் பாதி என தத்தளிக்கிறான் இந்த அகிலன். சொல்ல வந்த கருத்தை, இன்னும் சுவாரஸ்யமான கதை, திரைக்கதை காட்சியமைப்புடன் கூறியிருந்தால் ஒரு விறுவிறுப்பான படமாக கவனம் பெற்றிருக்கும். இப்போது கடலுக்குள் முட்டுசந்தில் சிக்கிய கப்பலைப் போல அம்போவென நிற்கிறது அகிலன்.