சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு பாலிவுட்டில் உள்ள பாகுபாடு மற்றும் ஆதரவு குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில், அமீர்கானின் சகோதரர் ஃபைசல்கான் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தன்னை ஒரு பார்ட்டியில் வைத்து அவமதித்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
திரைப்படத் துறையில் நடக்கும் பாகுபாடு பற்றி நடிகர் ஃபைசல்கானிடன் கேட்டபோது, தானும் அதை அனுபவித்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
’’நம்முடைய தொழிலில் சரிவு ஏற்படும்போது பலரின் அவமதிப்புகளுக்கும் ஆளாக நேரிடும். என்னுடைய சகோதரரான அமீர்கானின் 50வது பிறந்தநாள் பார்ட்டியில் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் என்னை அவமதித்ததோடு, என்னிடம் வித்தியாசமாக நடந்துகொண்டார். நான் ஒருவரிடம் பேச முற்பட்டபோது அவர் அதைத் தடுத்து, அவருடையப் பேச்சை திசைதிருப்பினார். இதுதவிர மற்றொருவரும் என்னை மிகவும் மோசமாக நடத்தினார். ஆனால் பெயர் சொல்ல விரும்பவில்லை.
அமீருடன் நான் சேர்ந்து நடித்த மேலா படத்திற்குப் பிறகு என்னுடைய உழைப்புக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அதற்குமாறாக நான் பாலிவுட்டால் ஒதுக்கப்பட்டுவிட்டேன். வெளியே இருந்துவரும் நபர்களுக்கு பாலிவுட்டில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெரிய நடிகரின் பிள்ளைகளாக இருந்தால் வாய்ப்புகள் தேடிவரும். ஆனால் திறமையை நிரூபிக்காவிட்டால் வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஷாருக்கான், அக்ஷய் குமார் மற்றும் ஆயுஷ்மான் போன்றவர்களும் பாலிவுட்டில் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள். ஆனால் வெளியே இருந்து வருபவர்களைவிட உள்ளே இருப்பவர்களுக்குத்தான் வாய்ப்புகள் எப்போதும் தேடிவரும்’’ என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டில் நடக்கும் பாகுபாடு பற்றி நடிகை கங்கனா ரனாவத் பல இடங்களில் பேசியுள்ளார். மேலும் ஏற்கெனவே கரண் ஜோஹர் குறித்து அவருடைய ஷோவிலேயே விமர்சனம் செய்து கங்கனா பேசிய வீடியோ வைரலாகியது.