சினிமா

‘தல 60’ படத்தில் ரேஸராக நடிக்கும் அஜித்?

‘தல 60’ படத்தில் ரேஸராக நடிக்கும் அஜித்?

webteam

‘தல60’ படத்தில் நடிகர் அஜித் ரேஸராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, ‘தமிழில் நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடிக்கும் இந்தப் படத்தை, வினோத் இயக்குகிறார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழின் முதல் படமாகும். 

இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தலயின் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தென் ஆப்பிரிக்கா பகுதியில் எடுக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அளித்த ஒரு பேட்டியில், “தல 60 படத்தில் அஜித் அஜித்தாகவே இருப்பார். படத்தில் ரேஸிங் காட்சி, ஸ்போர்ட்ஸ் என்று அவருக்கு பிடித்தமான அனைத்தும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித்தின் 60 வது படம் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.