பிரபுதேவாவுடன் திருமணம் நடக்க இருப்பதாக நிகிஷா படேல் தொலைக்காட்சியில் பேட்டி அளித்ததாக வந்த தகவல் பற்றி அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
நிகிஷா படேல், இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவரது பூர்வீகம் குஜராத். அங்குதான் இவர் பிறந்தார். பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் இவர். ’என்னமோ ஏதோ’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்துள்ளர். ஏப்ரல் 3ஆம் தேதி பிரபுதேவாவிற்கு பிறந்தநாள். ஆனால் நிகிஷா மிக தாமதமாக ஏப்ரல் 11 அன்று பிரபுதேவாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ”ஹேப்பி பர்த்டே..என் உலகம்; என் வாழ்க்கை! மிக தாமதமாக போஸ்ட் போட்டிருக்கிறேன். என் வாழ்வின் மிக அற்புதமான மனிதர். நீங்கள் எவ்வளவு அர்த்தமானவர் என்பதை வார்த்தைகளால் அதை விளக்க முடியாது பிரபுதேவா” என்று கூறியிருந்தார்.
அதனை அடுத்து அவர் அளித்த பேட்டியில் பிரபுதேவாவுடன் நடிப்பது மட்டும் ஆசை இல்லை. அவரை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என அவர் பேசியிருந்ததாக செய்தி பரவியது. இதனால் மீண்டும் நடனப்புயல் வாழ்கையில் புயல் மையம் கொண்டது. இதை அடுத்து அவரை பலரும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர். ஆகவே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், “தொடர்ந்து ஊடகங்களில் இருந்து வரும் போன்களால் நான் மிக விரக்தி அடைந்துள்ளேன். இதில் உண்மையில்லை என்பதை நான் விளக்கிவிடுகிறேன். இந்தச் செய்தி தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. நான் என் வேலையிலும் என் குடும்பத்துடனும் பிசியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.