சினிமா

ஹீரோவின் கனவு பலித்ததா ?. - சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ’ஹீரோ’ திரைப்படத்தின் விமர்சனம்.

ஹீரோவின் கனவு பலித்ததா ?. - சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ’ஹீரோ’ திரைப்படத்தின் விமர்சனம்.

subramani

கல்லாகட்டும் கல்லூரிகளுக்கு ஆள்பிடித்து தரும் நபராகவும் போலி சான்றிதழ்கள் அடிப்பதை தொழிலாகவும் கொண்டிருக்கிறார் சக்தியாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன். அதற்கு ஒரு ப்ளாஸ் பேக் நியாயமும் வைத்திருக்கிறார் அவர். இந்திய கல்விமுறையை மாற்ற வேண்டும் என நினைக்கும் மாஸ்டராக வரும் அர்ஜுன் பரீட்சையில் தோல்வியடையும் மாணவர்களின் திறமையை கண்டுபிடித்து அவர்களை கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்குகிறார். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகுமானால் தனது கல்வி வியாபாரம் கெடும் என நினைக்கும் வில்லனாக அபய் டியோல் நடித்திருக்கிறார். இம்மூவரும் ஒற்றைப் புள்ளியில் சந்திக்கும் போது நடக்கும் விளைவுகள் தான் படத்தின் திரைக்கதை.

இப்படத்தினை இரண்டு வகையாக அணுகலாம். ஒன்று இக்கதையினை திரைமொழியாக பி.எஸ்.மித்ரன் கையாண்டிருக்கும் முறை. இன்னொன்று இந்த சினிமா பேசியிருக்கும் கல்வி குறித்த அரசியல். சினிமா வகைமைகளில் மாணவர் மற்றும் குழந்தைகள் குறித்த கதையினை ரொம்பவே கவனத்தோடு கையாள வேண்டும். ஆனால் மித்ரன் இக்கதையினை சற்று அலட்சியமாகவே கையாண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. திரைக்கதை குறித்து எந்த அக்கறையும் இன்றி ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான தொடர்பு நியாயங்கள் எதுவுமின்றி தான் பேச நினைத்திருக்கும் கல்வி அரசியல் நோக்கியே நகர்கிறது காட்சிகள். இந்த பாணி ரசிகர்களை சோர்வடையச் செய்கிறது. ஒரு பெரிய கல்வி நிறுவனத்தினை நடந்தி வரும் அபய் டியோல் திறமையான மாணவர்களின் மூளையை மருந்து கொண்டு முடக்குவதாக சித்தரிப்பதில் நம்பகத்தன்மை இல்லை.

ஒருவனின் ஐடியாவை அழித்தால் அவனை அழித்துவிடலாம் என்கிறார் வில்லன். ஒருவனது உயிரையே பறித்தாலும் அவனது ஐடியாக்களை அழிக்க முடியாது என களமாடும் அர்ஜுன் மற்றும் அவரது மாணவர்கள் என நல்ல பெரிய சித்தாந்தகளை வலுவான அடிநாதமாக எடுத்துக் கொண்டாலும் மித்ரன் அதனை சரியாக நமக்கு புரியவைக்க தவறுகிறார்.

இந்த கல்விமுறை மாணவர்களுக்கு பகுத்தறிவை கொடுக்கவில்லை என அர்ஜுன் வசனம் பேசுகிறார் அந்த வசனத்தின் துவக்கதில் அவரே கடவுள் நமக்கு இதனால் தான் அறிவைக் கொடுத்திருக்கிறார் என்றும் குறிப்பிடுகிறார். God Bless You சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்திகிறார். கதையில் குறைந்த மதிப்பெண் எடுத்த திறமையான மாணவியாக வரும் இவானா’வின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு ஒன்றை வில்லன் பல்லாயிரம் கோடிக்கு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்கிறார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு சரியான வாய்ப்பையும் இடத்தினையும் நாம் உருவாக்கித் தரவில்லை, ஆலை கழிவு, நீட் வியாபாரம், புதிய கண்டுபிடிப்புகள் தான் நாட்டின் தரத்தை உயர்த்தும் என ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வெறு பெரிய ப்ளாட்களை எடுத்து பேச முயன்றிருக்கும் மித்ரன் கடைசி வரை எதை நோக்கி பயணிப்பது என புரியாமல் திணறியிருக்கிறார்.

படத்தின் முன் பாதியில் சில காட்சிகளில் தலைகாட்டியிருக்கும் நாயகியான கல்யாணி ப்ரியதர்சன் அதன் பிறகு ஆட்கொணர்வு மனு போட்டு தேடினாலும் கடைசிவரை கிடைக்கவில்லை. ரோபோ சங்கரும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். பல நாடுகளில் வருடம் தோறும் லட்சக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகள் காப்புரிமைக்காக சமர்ப்பிக்கப்படும் நிலையில் இந்தியாவில் வெறும் 12000 கண்டுபிடிப்புகள் மட்டுமே சமர்பிக்கப்படுகிறது என்பதை ஸ்டேட்மெண்டாக சொல்லாமல் சற்றே ஜனரஞ்சகமாக சினிமாவாக சொல்லியிருக்கலாம். அப்படி கலைபூர்வமாக சொல்வதுதானே சினிமாவின் பாணி. பிரச்னைகளை பேசும் அளவிற்கு அதற்கான தீர்வென முன்வைக்க ஒரு காட்சி கூட இல்லை.

சிறுவயதில் சக்திமானாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் வில்லனை அழிக்கும் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார், இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோக்களின் அடையாளம் முகமூடி. அதனை சிவகார்த்திகேயன் முகத்திலும் இயக்குனர் அணிவிக்கத் தவறவில்லை. சமுதாயத்தில் கிட்டத் தட்ட அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையை சூப்பர் ஹீரோக்களை கொண்டு அணுகும் பாணி பெரும்பாலும் கைகொடுக்காது. காரணம் இந்த ஐடியாவே முரண் தன்மை நிறைந்த ஒன்று. இயக்குனர் சங்கர் படத்தில் வருவதைப் போல ரசிகனை உணர்சிவசப்பட வைத்துவிட்டால் படம் வெற்றி தான் என்ற முயற்சியை செய்ய மித்ரனும் தவறவில்லை.

யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என டைட்டில் கார்டில் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி யுவன் டச் என்று சொல்வார்களே அந்த டச் மிஸ்ஸிங். படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்து டீசண்ட்டாக ஒதுங்கி இருக்கிறார் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். சிவகார்த்திகேயனின் நடிப்பு என குறிப்பிட்டுச் சொல்ல காட்சிகள் எதுவும் இல்லை., அவரது ரசிகர்களுக்கு இந்த படமும் ஏமாற்றம் தான். மொத்தத்தில் சூப்பர் மேன் ஆக ஆசைப்பட்ட ஹீரோவின் கனவு பலித்ததா புளித்ததா என்பதை திரையரங்கம் சென்று பாருங்கள்.