இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் நடிகை ராதிகா அறிமுகமான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் வெளியாகி 42 ஆண்டுகள் ஆகிறது.
இதனையோட்டி இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ” என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்.. 42 வருடமாகிறது என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை. உன் திரை உலகப் பயணத்துக்கும் உன் பாசத்துக்கும் முடிவேதும் இல்லை. வாழ்த்துகள். அன்புடன் பாரதி ராஜா” என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த நடிகை ராதிகா உங்களால் மட்டுமே நான் இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆணாதிக்கம் நிறைந்த கோட்டையிலும் ஒரு பெண்னின் சாதனைகளை கொண்டாடாத சமகாலத்தவர்களிலும் உங்கள் வார்த்தைகள் சாதாரணத்தைவிட முக்கியம்” நன்றியுணர்வோடு கூறியுள்ளார்.
கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. வெள்ளந்தியான ராதிகா சுதாகர் காதல் ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அப்படம் மூலம்தான் ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் என்று ஸ்டார் நடிகர்ளுடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். கிழக்கே போகும் ரயில் மட்டுமல்ல: கிழக்குச் சீமையிலே படம் அவரது நடிப்பின் உச்சம்.
இன்றும், சித்தி 2 சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் கோடிஸ்வரி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி , கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே இயக்குநர் பாரதிராஜாவின் முதல்படம். இரண்டாவது படம்தான் கிழக்கேப் போகும் ரயில். இப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆனாலும், நல்ல படம் என்று இன்னும் மக்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.