சினிமா

சிம்பு மீது மீண்டும் மைக்கேல் ராயப்பன் புகார்

சிம்பு மீது மீண்டும் மைக்கேல் ராயப்பன் புகார்

webteam

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீண்டும் சிம்புக்கு எதிராக புகார் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் நஷ்டமானதாக கூறி கடந்த வருடம் டிசம்பர் மாதம் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மொத்தம் 60 நாட்கள் தன் படத்திற்கு சிம்பு கால்ஷீட் கொடுத்திருந்ததாகவும் ஆனால் வெறும் 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்ததாகவும் ஆகவே படத்திற்கு தேவையான காட்சிகளை சரிவர எடுக்க முடியவில்லை. இதனால் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமாகிவிட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதன் பிறகு ஒரு ஆடியோ விழாவில் பேசிய சிம்பு அவர் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தார். 

மைக்கேல் ராயப்பனின் புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு எதிராக ‘செட் நோட்டீஸ்’ போட்டிருந்தது. அதையொட்டி சிம்பு தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் சிம்புவுக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக சிம்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி அதில் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. 

சிம்பு தன் பழைய நிலையில் இருந்து மாறி மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது. ஆகவே இந்தத் தருணத்தில் மீண்டும் புகார் அளித்திருப்பதால் பிரச்னை பெரியதாக வெடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.