சினிமா

‘2.0’ முதல் நாள் வசூல் 73.5 கோடி : தமிழகத்தில்?

‘2.0’ முதல் நாள் வசூல் 73.5 கோடி : தமிழகத்தில்?

webteam

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் முதல் நாள் 73.5 கோடி வசூல் செய்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளோடு நேற்று வெளியானது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது, இந்திய சினிமா மார்க்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கும் என பேசப்பட்டது. அதை வைத்தே பல நிறுவனங்கள் மேலும் பணத்தை முதலீடு செய்ய முன்வருவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக் கணக்கிடப்பட்டது. 

‘2.0’ படம் பாகுபலியை விட அதிக திரைகளில் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டதால், ‘பாகுபலி 2’ படத்தின் முதல் சாதனையை தட்டிப்பறிக்கும் எனக் கூறப்பட்டது. இந்திய அளவில் மட்டும் ‘2.0’ முதல் நாள் 100 கோடி வசூல் செய்யலாம் எனக் கூறப்பட்டது. அத்துடன் உலக அளவில் 135 கோடியை வசூல் தாண்டும் எனவும் நம்பப்பட்டது. இதற்கு முன் வெளியான ‘பாகுபலி 2’ முதல் நாள் மட்டும் 125 கோடியை வசூத்திலிருந்தது.  

இந்நிலையில் நேற்று வெளியான 2.0 திரைப்படம் இந்திய அளவில் முதல் 73.5 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. வட இந்தியாவில் 21 கோடி, தமிழ்நாட்டில் 20 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 19 கோடி, கேரளாவில் 5.5 கோடி மற்றும் கர்நாடகாவில் 8 கோடி வசூலித்துள்ளது. 

இருப்பினும் 2018ஆம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘2.0’ பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான சர்கார் முதல் நாள் 70 கோடியும், ஆமீர்கான் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் 52 கோடியும் வசூல் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.