‘நாற்காலி’ என்பது தனது படத்தின் தலைப்பில்லை என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ என சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. குறிப்பாக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வெளிக்காட்டும் வகையில் இந்தப் படம் அமையும் எனவும் கூறப்பட்டது.
இந்தத் தகவல்கள் வேகமாக பரவிய போதும், படக்குழு சார்பில் இதுதொடர்பாக விளக்கமோ அல்லது மறுப்புமோ தெரிவிக்கப்படவில்லை. இதனால் ‘நாற்காலி’ தான் தலைப்பு என்ற வதந்தி அதிகமாக பரவியது. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையிட்டுள்ளார். அதில், “நாற்காலி எனது அடுத்த படத்தின் தலைப்பு இல்லை. தயவுசெய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, அவர் எடுத்த ‘சர்கார்’ திரைப்படம், ‘செங்கோல்’ என்ற படத்தின் கதை எனப் பிரச்னைகள் எழுந்து, நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு, ‘சர்கார்’ திரைக்கு வந்தது. இந்நிலையில் முருகதாஸ் படத்திற்கு படக்குழு தலைப்பு வைப்பதற்கு முன்னரே, ‘நாற்காலி’ தான் தலைப்பு என்ற வதந்தி பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.