வணிகம்

ஜொமோட்டோ ஐபிஓ: இலக்கு ரூ.9,375 கோடி... குவிந்த விண்ணப்பங்களோ ரூ.2.13 லட்சம் கோடி!

Veeramani

ஐபிஓ மூலம் ஜோமோட்டோ நிறுவனம் ரூ.9,375 கோடி திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், ரூ.2.13 லட்சம் கோடி அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளது.

ஜொமோட்டோ நிறுவனத்தின் ஐபிஓ-வுக்கு ஜூலை 14 முதல் 16-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு 38 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. ரூ.9,375 கோடி அளவுக்கு நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், ரூ.2.13 லட்சம் கோடி அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. சமீப காலங்களில் இவ்வளவு பெரிய வரவேற்பு எந்த ஐபிஓ-வுக்கும் இருந்ததில்லை.

இந்திய ஐபிஓ வரலாற்றில் மூன்றாவது பெரிய வரவேற்பு இதுவாகும். 2008-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. ரூ.11,563 கோடி அளவுக்கு திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், 8.44 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இதுவரை கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு இதுவாகும்.

இரண்டாவதாக 'கோல் இந்தியா' நிறுவனம் 2010-ம் ஆண்டு ஐபிஓ வெளியிட்டது. ரூ.15,199 கோடிக்கு நிதி திரட்ட திட்டமிட்டது. ஆனால் 2.32 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. மூன்றாவதாக ஜொமோட்டோ நிறுவனத்தின் ஐபிஓவுக்கு ரூ.2.13 லட்சம் கோடிக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

பணியாளர்களுக்கு ரூ.41 கோடிக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதில் 31 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே பணியாளர்கள் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கில் 7.45 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 32.9 மடங்கு மற்றும் 51.7 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. ஜூலை 27-ம் தேதி இந்த பங்கு பட்டியலாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.