வணிகம்

'10 நிமிட டெலிவரி' - சர்ச்சையான ஜொமோட்டோ நிறுவனர் பதிவு!

'10 நிமிட டெலிவரி' - சர்ச்சையான ஜொமோட்டோ நிறுவனர் பதிவு!

webteam

`இனி பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி’ என ஜொமோட்டோ நிறுவனர் தீபேந்தர் கோயல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பிறகு சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. அதைத்தொடர்ந்து தனது பதிவுக்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் ஜொமோட்டோ நிறுவனரின் பதிவுக்கு, `10 நிமிட டெலிவரி என்பது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் டெலிவரி செய்பவர்களுக்கு பாதுகாபானது அல்ல. தவிர ஹோட்டல் நிறுவனங்களுக்கும் சிக்கல்தான்’ என பலரும் பதிவிட்டுள்ளனர். மேலும் `குறுகிய காலத்தில் இப்படி டெலிவரி வழங்குவது ஆபத்தானது’ என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்திருக்கும் தகவலில், “டெலிவரி செய்பவர்கள் யாரும் நிரந்தர பணியாளர்கள் கிடையாது. அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. ஆனால் குறுகியகாலத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருப்பது ஏற்க முடியாது. இந்த விஷயம் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்” என ட்விட் செய்திருக்கிறார். மேலும் இந்தியா முழுவதும் இருக்கும் தொழில் சங்கங்களும் ஜொமோட்டோ நிறுவனருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

இதனையடுத்து ஜொமோட்டோ நிறுவனர் தீபேந்தர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், “10 நிமிட டெலிவரி என்பது அனைத்து வகையான உணவுக்கும் கிடையாது. பிரியாணி, மோமோ, ஆம்லெட் உள்ளிட்ட குறிப்பிட்ட சில உணவுக்கள் மட்டுமே 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும். சரியான நேரத்தில் டெலிவரி செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட மாட்டாது. அதேபோல சரியான நேரத்தில் டெலிவரி செய்தால் ஊக்கதொகையும் வழங்கப்பட மாட்டாது. அதேபோல குறிப்பிட இடங்களுக்கு மட்டுமே இந்த சலுகையை வழங்க முடியும்” என்றும் தீபேந்தர் ட்வீட் செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, ஜொமோட்டோ நிறுவனம் சார்பில் `இன்ஸ்டண்ட்’ என்னும் பெயரில், ஏப்ரல் முதல் குர்கான் உள்ளிட்ட சில நகரங்களில் சோதனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே ஜொமோட்டோ கஸ்டமர் வாடிக்கையாளர் பிரிவு ஊழியரொருவர், சில மாதங்களுக்கு முன் வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அச்சம்பவத்தின்போது சம்பந்தப்பட்ட ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறிய ஜொமாட்டோ, அந்நிகழ்வுக்காக மன்னிப்புக் கோரியது. இருப்பினும் இதுபோன்ற சிறு பிரச்னைகளுக்காக ஊழியரை உடனடி பணி நீக்கம் செய்வதென்பது அதிகாரவர்க்கத்தின் செயல்பாடு என விமர்சனங்கள் எழுந்தத்தால், அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்ப்பதாக தீபிந்தர் கோயல் தெரிவித்தார்.

இப்படியாக ஜொமோட்டோவும் சர்ச்சைகளும், முடிவில்லாமல் தொடர்ந்து வருகின்றன.