அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் ஜியோமி நிறுவனத்தின் ரூ. 5,551.27 கோடியை பறிமுதல் செய்வதற்கான அமலாக்கத்துறையின் முடிவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், ஜியோமி நிறுவனம் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட கணக்குகளை நிபந்தனையுடன் அன்றாட நடவடிக்கைகளுக்காக இயக்க முடியும் என்று நீதிபதி கூறினார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜியோமி நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரபலமான மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமியின் 5 ஆயிரத்து 551 கோடி ரூபாய் சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது. சீனாவிற்கு ஜியோமி பணம் அனுப்பும்போது இந்திய வங்கிகளுக்கு தவறான தகவல்களை தந்ததாகவும், இது அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
ஆனால் , இந்திய சட்ட திட்டங்களை அனுசரித்தே தங்கள் நிறுவனம் நடந்துகொண்டதாகவும், ராயல்டி கட்டணங்களை நேர்மையாக செலுத்தியதாகவும், வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் சீன நிறுவனமான ஜியோமி கூறியது. இந்திய சந்தைகளில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வரும் ஜியோமி மொபைல் போன்கள் சந்தையில் 20 சதவிகித பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.